நீல நிறச் சூரியன் விமர்சனம்.. பெண்ணாக மாறிய ஆண்

கதை….

பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் அரவிந்த்.. ஆனால் இவருக்குள் பெண்மை அடிக்கடி எட்டிப் பார்க்க பெண்ணாக மாறி வாழ ஆசைப்படுகிறார்.. ஆனால் இந்த சமூகம் & பெற்றோர்கள் எப்படி சம்மதிப்பார்கள் என்ற மனநிலையிலே 25 வயதை கடந்து விடுகிறார்.

ஆனாலும் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை.. ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. ஒரு கட்டத்தில் பெண்ணாக மாற முடிவெடுத்து வீட்டிலும் பள்ளியிலும் சொல்ல பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது..

ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கும் இவர் பெண்ணாக மாறுகிறார்.. அதன் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

பள்ளியில் ஆசிரியராகப் பார்த்த மாணவர்கள் இவரை ஆசிரியையாக பார்த்தார்களா..? பெற்றோர்கள் உறவினர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்….

இந்த நீல நிறச் சூரியன் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறார் சம்யுக்தா விஜயன்.. இவரே இந்த படத்தின் இயக்குனர்.. தமிழ் சினிமாவில் திருநங்கை இயக்கிய முதல் படம் என்றும் இதை குறிப்பிட்டு சொல்லலாம்..

தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணம் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன்.. இவரின் வாழ்க்கையே படமாக்க எடுக்கப்பட்டதால் மெல்லிய உணர்வுகளை உணர்வுபூர்வமாக ஒவ்வொரு காட்சியிலும் உணர்ந்து நடித்திருக்கிறார்..

பெண்ணாக மாறிய பின் ஒரு ஆணை திருமணம் செய்ய நினைக்கும் இவரது எண்ணத்தை அந்த நபர் பொடியாக்கும் போது இவர் நொறுங்கி போகும் காட்சி ரசிக்க வைக்கிறது..

இவரின் தோழியாக வரும் ஹரிதா நல்ல தோழியாக வருகிறார்.. பெண்ணாக மாற நினைக்கும் தன் தோழிக்கு / தோழனுக்கு உற்ற துணையாக இருக்கும் இவரது நடிப்பு பாராட்டுக்குரியது…

மேலும் கிட்டி, கஜராஜன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பு கவனிக்க வைக்கிறது.. தங்கள் அனுபவ நடிப்பில் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..

இவர்களுடன் பள்ளி துணை முதல்வர் மணிமேகலை, பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்ற நபர்கள் மாணவர்கள் உறவினர்கள் மற்றும் நாயகின் அக்கா கேரக்டரும் கவனிக்க வைக்கிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஆணாகப் பிறந்த ஒருவர் பெண்ணாக ஆசைப்பட்டு முழு பெண்ணாகவே மாறி விடுகிறார்.. ஆனால் இதுவரை அவரை ஆணாகப் பார்த்த பெற்றோர்களும் இந்த சமூகமும் அவர் பெண்ணாக மாறிய பின் எப்படி பார்க்கிறது என்பதை உணர்வோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

படத்தின் பல காட்சிகளில் ஒளிப்பதிவு ஆவணப் படங்களை பார்ப்பது போன்ற உணர்வே தருகிறது.. முக்கியமாக கேமரா ஆங்கிள்களை பெரும்பாலும் வைத்து இடத்திலேயே வைத்து எடுத்து இருக்கின்றனர்.

கோவை மாவட்ட கொங்கு தமிழில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் வருவதால் அழகான தமிழைக் கேட்டு ரசிக்க முடிகிறது.

பாடல்களும் பின்னணி இசையும் நேர்த்தியாக அமைந்துள்ளது… படத்தொகுப்பிலும் குறை இல்லை..

ஆணாகப் பிறந்த ஒருவர் பெண்ணாக மாறினால் அவரை திருநங்கையாக மட்டுமே இந்த சமூகத்தில் கருதப்படுகிறார். ஆனால் அவர் ஒரு பெண் என்ற மனநிலையை மக்கள் மறந்து விடுகிறார்கள்.. என்பதை கதையின் நாயகன் அரவிந்த் பானு கேரக்டர் மூலம் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்..

ஆக இந்த நீல நிறச்சூரியன் படம்… பெண்ணாக மாற நினைக்கும் ஆண்களுக்கும் ஆணாக மாற நினைக்கும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும்  சமர்ப்பணம்..

Related posts

Leave a Comment