வேட்டையன் – திரை விமர்சனம் – 4/5

நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நபர்களின் பேராசையை கிழித்து தொங்க விட்டு இருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம்.

அடுத்து இந்தக் கதைக்கான நாயகன் ரஜினி . கதையின் நாயகனான அவர் கேரக்டராகவே மாறி முழு படத்தையும் தாங்கியிருப்பது இன்னொரு சிறப்பு.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா விஜயன்) தனியார் நீட் கோச்சிங் சென்டரின் அப்பட்டமான மோசடியை எதிர்த்து துணிச்சலாக போராடுகிறார். அப்பாவிகளை எமாற்றி கோடிகளில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் காரர்கள் சும்மா இருப்பார்களா? ஆம், அதே தான் நடக்கிறது. சரண்யா கொலையாகிறார், அதுவும் பாலியல் பலாத்கார அடையாளத்துடன்.

அந்த வழக்கு விசாரணையில் இவர் தான் குற்றவாளி என்று நம்பும் ரஜினி அவசரமாய் கிடைத்த ஆதாரங்கள் பின்னணியில் இளைஞன் ஒருவனை என்கவுண்டர் செய்துவிட…
ஆரம்பிக்கிறது, பிரச்சினை. இந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.

அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.உண்மையான கொலையாளி யார்? சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன? என்பதை அதிப்படியான தோட்டா சத்தங்களுடன்சொல்லியிருப்பதே இந்த வேட்டையன்.

என் கவுண்டர் எஸ்.பி. அதியனாக நடை, உடை, பாவனையில் ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஸ்டைலில் கவர்ந்து விடுகிறார். கூலிங்கிளாசை அவர் கையாளும் அந்த அதிவேக ஸ்டைல் அவருக்கே உரித்தான ஸ்பெஷல். அதேநேரம் போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பில் நிதானம் காட்டுகிறார். தனது தவறான முடிவுக்காக அவர் வருந்தும் இடங்கள் ஆக்ஷனுக்கிடையே ரியாக்ஷன்.

நீதியின் பக்கம் நிற்கும் நீதிபதியாக அமிதாப் நடிப்பில் ஆழ்கடல் ஆழம், கூடவே நிதானம்.
ஆசிரியர் சரண்யாவின் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார்.
ரஜினி உடனேயே பயணிக்கும் ‘பேட்டரி’யாக பகத்பாசில் படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம். விசாரணைக்கு போன இடத்தில் நிஜமானபோலீஸ் அதிகாரி ரித்திகாசிங்கை தன் உதவியாளர் என்று சொல்லி கெத்து காட்டும் இடத்தில் தியேட்டரில் சிரிப்பலை. இவரை கதையில் திருடன் என்கிறார்கள். ஆனால் படத்தில் தனது கலகல நடிப்பால் நம் உள்ளத்தை கொள்ளையாடி விடுகிறார்.

ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியர் என்கவுண்டருக்கு எதிரான மனப்பான்மையுள்ள பெண்ணாக தனது கேரக்டரில் நிமிர்ந்து நி்ற்கிறார்.

போலீஸ் அதிகாரியாக ரஜினிக்கு துணை நிற்கும் கேரக்டரில் ரித்திகாசிங் கம்பீரம். கார்ப்பரேட் ராணா வில்ல நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அபிராமிக்கு இந்த பாத்திரம் புதுசு. கறுப்பு ஆடு போலீசாக கிஷோர் இன்னொரு நடிப்புச் சுரங்கம்.
என்கவுண்டர் சரியா? தவறா? நீட் தேர்வுக்கு கோச்சிங் என்ற பெயரில் எழை மக்களை எப்படி பணக்கார வர்க்கம் அட்டையாய் உறிஞ்சுகிறது என்பதை சொன்ன விதத்தில் ஞானவேல் சமூக அக்கறை இயக்குனராக இதிலும் தன்னை பதிவு செய்து விடுகிறார்.

படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. ஒன்று, ரஜினி படமாக இருந்திருக்க வேண்டும். அல்லது ஞானவேல் படமாக சென்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதி இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

என்றாலும் நாட்டுக்கு தேவை விரைவான நீதியே தவிர அவசரமான நீதி அல்ல என்ற கருத்தை உரக்க பேசிய விதத்துக்காக ஞானவேலை பாராட்டலாம். இடைவேளைக்குப்பின் வரும் வேகக்குறைவை டைரக்டர் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது ஏனோ…

சமூக நீதிக்குள் ரஜினி என்ற மசாலா தடவிய விதத்தில் இந்த வேட்டையன் குறி தப்பாதவன்.

Related posts

Leave a Comment