சார் – திரைப்பட விமர்சனம் – மதிப்பீடு : 3/5

சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘சார்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

மாங்கொல்லை எனும் கிராமப் பகுதியில் 1950- 60 -80 ஆகிய காலகட்டங்களில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் பின்னணியில் கல்வியின் அவசியம் குறித்து பேசும் படமாக ‘சார்’ உருவாகி இருக்கிறது.

கோலோச்சு குடும்பம் எனும் குடும்பம் மாங்கொல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த குடும்பத்தில் மூத்த உறுப்பினராக எழுத்தாளர் ஜெயபாலன் இருக்கிறார். இவர் சாமியாடி. அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை தருவதற்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாதுரை என்பவர் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து பள்ளி கட்டிடத்திற்கான நிலத்தை வழங்குமாறு கோலோச்சு குடும்பத்தினரிடம் கேட்கிறார்கள். அவர்கள் மறுப்பு தெரிவித்து விட, அந்த குடும்பத்தின் மற்றொரு நபரிடம் நிலத்தை தானமாக கேட்க, அவர் பள்ளிக்கூடத்திற்காக நிலம் வழங்குகிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி அறிவை பெற்று வாழ்வாதாரம் உயர்ந்தால் …பல கேள்விகளை கேட்பார்கள். ..சமமாக உட்காருவார்கள். .. அதிகார பகிர்வினை கோருவார்கள்… என கோலாச்சு குடும்பம் கருதுகிறது. இதனால் சாமியாடி ,அந்த பள்ளிக்கூடத்தை இடிக்க திட்டமிடுகிறார். மக்களிடம் இருக்கும் தெய்வ நம்பிக்கையை பகடைக்காயாக்கி சாமியாடும் போது சாமியின் பாதையில் தடைக்கல்லாக அந்த பள்ளிக்கூட கட்டிடம் இருக்கிறது என சொல்லி அதனை இடிக்குமாறு உத்தரவிடுகிறார். ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மையான விசயத்தை தலைமை ஆசிரியர் அண்ணாதுரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதாரணத்துடன் விவரிக்கிறார். இதனால் தெளிவு பெற்ற அம்மக்கள்.. சாமியாடியை வசை பாடுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த சாமியாடி தன் பேரனிடம், ‘உறவாடி கெடு’ என வாக்குறுதியை வாங்கிவிட்டு, அந்த பள்ளியை எப்படியாவது இடித்து விட வேண்டும் என சொல்கிறார். பேரனான சக்தி (தயாரிப்பாளர் சிராஜ்) அந்த பள்ளிக்கூடத்தை இடித்தாரா? இடிக்கவில்லையா? என்பது தான் கதை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை புகட்டிய அண்ணாதுரை ஆசிரியரை ஆதிக்க சாதியினர் பைத்தியம் என சதி செய்து மக்களிடம் சொல்கிறார்கள். அதேபோல் அவரது மகனான பொன்னரசனையும் பைத்தியம் என பட்டம் கட்டி ஒதுக்கி விடுகிறார்கள். மூன்றாவது தலைமுறையை சேர்ந்த சிவஞானத்தையும் (விமலையும்) பைத்தியம் என பட்டம் கட்டி ஒதுக்க நினைக்கும் போது.. அவர் உண்மை என்ன? என்பதை அறிந்து, வெகுண்டு எழுகிறார். அதன் பிறகு அவர் அந்த பள்ளிக்கூடத்தை இடிக்காமல் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதையும் இணைத்து சொல்கிறார்கள்.

பள்ளிக்கூடம் -ஆசிரியர்கள் -ஒடுக்கப்பட்ட மாணவர்கள் -கல்வி -என கல்வி சார்ந்த விசயங்களை பேசி இருப்பதால் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். அத்துடன் உச்சகட்ட காட்சியில் அரசாங்கம் வழங்கியிருக்கும் இலவச கல்வியை தவற விடாதீர்கள் என்ற அறிவுரையையும் வழங்கி இருக்கிறார்.

முதல் பாதி திரை கதையை விட இரண்டாம் பாதி திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலும்.. படம் உருவாக்கலில் போதாமையின் காரணமாக பல காட்சிகள் மனதில் தங்க மறுக்கிறது. அதிலும் குறிப்பாக உச்சகட்ட சண்டைக் காட்சியிலும் போதிய ஆவேசமும் ,ஆக்ரோஷமும் இல்லாமல் காட்சி அமைப்பும், கோணங்களும் அமைக்கப்பட்டிருப்பதால்… சுவாரசியத்தை விட எரிச்சல் தான் ஏற்படுகிறது.

விமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பதை விட, காட்சிகளில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ…! அதை மட்டுமே செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார். புது முகமாக அறிமுகமாகி இருக்கும் நடிகை சாயாதேவி- ஊர் குளத்தில் அதிகாலையில் குளிக்கும் காட்சியும், அதனை விமல் ரசிக்கும் காட்சியும் இளைய தலைமுறை ரசிகர்களுக்கு ஜில். சக்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சிராஜ் வில்லனுக்குரிய தோற்றத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பொன்னரசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன் அவருடைய பல பரிமாணங்களை காட்டி அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையில் ‘படிச்சிக்கிறோம் பொழச்சிகிறோம்.. ‘பாடல் தனித்த கவனத்தை ஈர்க்கிறது. 1950 -60 -80 ஆகிய காலகட்டங்கள் தான் கதை நடக்கும் களம் என்பதால் கலை இயக்குனரும் ,ஒளிப்பதிவாளரும் கடுமையாக உழைத்து ரசிகர்களை அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

பொதுவாக ஒரு சொலவாடை உண்டு. ”நல்ல விசயங்கள தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே வந்தா தான்…அது மத்தவங்க மனசுல ஆழமா பதியும்” அந்த வகையில் கல்வி அனைவருக்கும் இலவசமாகவும், சமமாகவும் வழங்க வேண்டும் என்பதனை எந்த கோணத்தில் சொன்னாலும் அதனை ஆதரிக்க வேண்டும். அந்த வகையில் சார் – இயக்குனரின் பாராட்டப்பட வேண்டிய படைப்பு.

சார் – ‘ம’திப்புடன் ‘போ’ற்றவேண்டிய ‘சி’னிமா.

Related posts

Leave a Comment