ஆலன் விமர்சனம்… ஆபத்தில்லா பயணம்

கதை…

சித்தப்பாக்களின் பணத்தாசை வெறியால் தன் குடும்பத்தை இழந்து தவிக்கிறார் நாயகன் வெற்றி.. பின்னர் இவரது அப்பாவின் நண்பர் உதவியுடன் சென்னைக்கு சென்று ஒரு மேன்ஷனில் தங்குகிறார்.. ஆனால் அங்கே தங்க மனமில்லாமல் காசிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அங்கே பல வருடங்களை கழிக்கும் அவர் ஆன்மீகத்திலும் ஆர்வமில்லாமல் தாத்தாவின் சொல்படி எழுத்து உலகிற்கு திரும்புகிறார்.

அங்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார்.. அந்தப் பெண்தான் இனி தன் வாழ்க்கை என்று காதல் வாழ்க்கையில் திளைக்கும் இவர் திடீரென காதலின் மரணத்தால் குழம்பி தவிக்கிறார்.

அதன் பிறகு இவர் என்ன செய்தார்..? குடும்ப அதன் பிறகு இவரது பாதை ஆன்மீக பாதையா? குடும்ப வாழ்க்கையா? எழுத்து உலகமா? என்பதெல்லாம் மீதிக்கதை.

நடிகர்கள்…

கமர்சியல் ஆக்சன் என பாதைகளை தேர்ந்தெடுக்காமல் படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நாயகன் வெற்றி… 8 தோட்டாக்கள் ஜீவி பம்பர் என படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளை மேற்கொண்ட இவர் ஆலன் படத்திலும் வித்தியாசமான பாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஆனால் படம் முழுக்க சீரியஸான தோற்றத்தை இ வர் வெளிப்படுத்தி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது..

‘பத்து தல’ படத்தில் சிம்புவின் தங்கையாக வந்த அனு சித்தாரா இதில் இடைவேளைக்குப் பிறகே வருகிறார்.. ஆனால் வந்த கொஞ்ச நேரத்திலேயே நம்மை கண்களால் ஈர்த்து விடுகிறார்..

வெற்றி நூலகத்தில் புத்தகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது அனுவின் கண்களையே நம் இதயம் தேடும்.. வெற்றியின் சிறு வயது காதலி நான்தான் என இவர் வார்த்தைகளால் சொல்லாமல் உணர்வுகளால் சொல்லி இருப்பது சிறப்பு..

தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கும் ஜெர்மனி நாட்டு பெண்ணாக மதுரா.. இவர் தமிழ் மொழி பேசும் அழகே தனி அழகு தான்..

இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின்.. காசி, ரிஷிகேஷ் சென்னை பாண்டிச்சேரி பகுதி காட்சிகளை அழகாக படம் பிடித்து நம்மை அந்தப் பகுதிக்கே அழைத்துச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்..

மனோஜ் கிரியானாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.. காசியில் ஒலிக்கும் ஆன்மீக பாடலில் வரிகளும் சிறப்பு சேர்த்திருக்கிறது.

ஆன்மீகம் மற்றும் இலக்கிய உலகம் சார்ந்த வசனங்கள் மனதில் நிற்கிறது..

“நீ படித்தால் நீ மட்டுமே பயன்பெறுவாய்.. ஆனா நீ எழுதினால் அது இந்த உலகுக்கு பயன்படும்… ” என்ற வசனங்கள் பளிச்..

எடிட்டர் மு.காசி விஸ்வநாதன் இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளத்தை வெட்டி இருக்கலாம்..

ஆலன் என்ற தலைப்பு சிவனைக் குறிக்கும் பொருளாகும்.. எனவே இது ஆன்மீக கதை என நினைத்து நாம் படத்தைக் காண தயாராகும் வேலையில் திடீரென காசியில் இருந்து சென்னைக்கு வரும் நாயகன் காதலில் விழுகிறார்.. இது காதல் படம் தான் என்று நினைக்கையில் திடீரென்று காதலியை தொலைத்து மீண்டும் ஆன்மீகத்துக்கு செல்கிறார்.. அடடா இது காதல் படம் அல்ல ஆன்மீகம் தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறேன் மீண்டும் இலக்கியம் காதல் என்று கதை நகர்வது கொஞ்சம் சலிப்பை தட்டுகிறது..

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்..

நாயகனுக்கு சிறுவயதில் நடந்த விபத்து சித்தப்பாக்களின் சதி திட்டம் ஆகியவை திணிக்கப்பட்ட பிளாஷ்பேக் சீன்களாக தெரிகிறது..

நாயகன் வெற்றியுடன் ஜெர்மனி பெண்ணும் அணுவும் சிறுவயதில் தொடர்பில் இருந்தனர் என்பதை கறை படிந்த கடிதத்தையும் புகைப்படத்தையும் வைத்து கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் டச்.. ஆனால் இரண்டு நாயகிகளும் நாயகனுடன் அதை சொல்லாமல் தவிர்த்தது ஏனோ? என்பது இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்

ஆக ஆலன்… ஆபத்தில்லா பயணம்

Related posts

Leave a Comment