2014 இல் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதை. அதை சினிமாவுக்கான சமரசம் இன்றி அதேநேரம் இதயம் நெகிழும் விதத்தில் தந்ததற்காக படக்குழுவுக்கு முதலில் ஒரு ஹாட்ஸ் ஆப்.
பள்ளியில் படிக்கிற காலம் தொட்டு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவன் முகுந்த்தின் கனவு. கல்லூரி காலத்தில் அதை செயல்படுத்த முனையும் போது தான் ஒரு பக்கம் பெற்றோரின் எதிர்ப்பு. இன்னொரு பக்கம் முகுந்த் காதலிக்கும் மலையாள பெண்ணின் குடும்பம் இதற்காகவே பெண் தர மறுக்கிறது. எதிர்ப்பை சரி செய்து காதலியை ஒருவழியாக கரம் பிடிக்கும் முகுந்த், அடுத்தடுத்த பதிவு உயர்வுகளில் மேஜர் ஆகிறார். அன்பு மனைவி அழகு குழந்தை என மகிழ்ச்சியாய் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க இன்னொரு பக்கம் காஷ்மீர் தீவிரவாதிகளை களை எடுக்க வேண்டிய கட்டாயம். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த யுத்தத்தில் மேஜர் வெற்றி பெறுகிறார். அதற்கு அவர் கொடுத்தது விலை மதிக்க முடியாத அவரது உயிர்.
மேஜர் முகுந்த்தின் இந்த வாழ்க்கை திரை மொழியிலும் அதே உணர்வு பொங்க வெளிப் பட்டிருப்பது ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கச் சிறப்பு.
உண்மைk கதையை படமா க்கும் போது உள்ள பிரச்சி னையே, அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரிந்து விடுவது தான். அதிலும் முடிவு சோகம் என்றால் அதுவரை ரசிகனின் மனநிலையை கட்டுக்குள் வைத்திருப்பது கடினம். அதையும் தாண்டி ரசிகனை வசப்படுத்துவது தான் ஒரு தேர்ந்த திரைக்கதையின் அடையாளம். அந்த அடையாளம் அமரனுக்கு வாய்த்திருப்பது சிறப்பு.
மேஜர் முகுந்த்தாக சிவகார்த்திகேயன். மேஜராக மிடுக்குகாட்டுபவர், காதல் மனைவி சாய் பல்லவியிட மான ஆழமான காதலை கண்களில் கொண்டு வருவது தனி அழகு. தீவிரவாத வேட்டையின் போது மேஜராகவே மாறிப் போயிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு மைல் கல் இந்த படம். அவரது காதல் மனைவியாக சாய் பல்லவி இன்னொரு நடிப்பு அத்தியாயம். காதலின் போது கொட்டிக் குவிக்கும் அதே அன்பை திருமணத்தின் போதும் குறையாமல் குவித்து வைத்துள்ள அந்த மனைவி கேரக்டருக்கு விருது நிச்சயம். நிச்சயமாகவே அதிகாலையில் வந்து நின்ற அண்ணனைப் பார்த்து “என்ன திடீர்னு வந்து இருக்க? ” என்று கேட்க, அண்ணன் கொண்டு வந்திருப்பது கணவனின் மரண செய்தி என்று அறியும் அந்த இடத்தில் அந்த நடிப்பும் உடல் மொழியும் ஒரு கணம் நம்மை பதற வைத்து விடுவது நிஜம். சத்தியத்திற்காக கணவன் உடலை பார்த்ததும் அழாமல் அவர் காட்டும் மௌனம் நடிப்பில் வேறு லெவல்.
கர்னலாக ராகுல் போஸ், விக்ரம் சிங்காக வரும் புவன்அரோரா, சிவகார்த்திகேயனின் பெற்றோர், சாய் பல்லவியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட நட்சத்திரப்படை காட்சிகளோடு நம்மை ஐக்கியம் ஆக்கி விடுவது நிஜம்.
ராணுவ தாக்குதல் காட்சிகளில் அன்பறிவோடு இணைந்து சி.எச். சாலின் கேமரா மிரட்டி விடுகிறது. படத்தின் இன்னொரு நாயகன் இசை தந்த ஜீ.வி. பிரகாஷ் குமார்.
மேஜரின் இறுதிச்சடங்கு எல்லாம் முடிந்த பிறகு அவரின் குழந்தை “அடுத்த லீவுக்கு அப்பா எப்பம்மா வருவாரு” என்று கேட்கிற இடத்தில் இதயம் ஒரு கணம் நின்று துடிப்பது மேஜ ருக்கான சமர்ப்பணம்.
படம் முடிந்ததும் திரையரங்கில் எழுகிற கரகோஷம் இந்த அமரனுக்கான சல்யூட்.