விடுதலை 2 – திரை விமர்சனம்

முதல் பாகத்தின் இறுதியில் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு மலை கிராமத்தில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் வாத்தியார் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்து அவரை துணிச்சலாக கைது செய்கிறார் குமரேசன். சித்திரவதை சகிதம் போலீசார் பெருமாள் வாத்தியாரைவிசாரிப்பது போல முதல் பாகம் நிறைவடைகிறது.
இரண்டாம் பாகத்திலோ பெருமாள் வாத்தியாரின் முன் கதை சொல்லப்படுகிறது. போலீஸ் காவலில் இருக்கும் அவரது வாக்குமூலமும் அதைத் தொடர்ந்து காவல்துறையின் ரியாக்சனும் தான் இந்த இரண்டாம் பாகம்.

இந்த இரண்டாம் பாகத்தில் பண்ணை அடிமை முறை, fஉழைக்கும் வர்க்க மக்களை தங்களது உடைமையாக கருதும் பண்ணைகளின் வக்ரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட கட்டாய மரணங்கள்என அங்குள்ள மக்களின் வலி வேதனைகளை ஆழமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இதில் குறிப்பாக பெருமாள் வாத்தியார் யார்? அவரை பொது வாழ்வில் உருவாக்கியவர் யார்? அவர் எப்படி தமிழர் படையை கட்டமைத்தார்? சாத்வீகமாக இருந்த அவரது பணி எப்படி ஆயுதம் ஏந்தி தாக்கும் அளவுக்கு மாறியது என்பதையெல்லாம் ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள், கொஞ்சம் உருக்கமாகவும்.

 

பள்ளி ஆசிரியராக அறிமுகமாகும் காட்சியில் இருந்து மக்களுக்கான தலைவராக மாறும் வரை நடிப்பில் உயர பறக்கிறது விஜய் சேதுபதியின் நடிப்புக் கொடி. நேர்மையற்ற போலீசால் கென் கருணாஸ் கொல்லப்படும் இடத்தில் புலம்பி தவிக்கிற ஒரு இடம் போதும். போராட்டக் களம் ஒரு நல்ல காதல் மனைவியை கொடுக்கும் இடங்கள் ரசனை மிக்கவை. காதல் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் நடிப்பில் வசீகரிக்கிறார். தங்கள் கோரிக்கைக்கு தடையாக இருக்கிற தந்தையையும் அண்ணனையும் கொல்லச் சொல்கிற இடத்தில் அந்த பூவுக்குள் புயல் நிஜமாகவே மனதுக்குள் திகில்.

பொதுவுடைமை தலைவராக வரும் கிஷோர் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
காவலராக வரும் சூரிக்கு முதல் பாகம் அளவுக்கு வேலை இல்லை என்றாலும், பெருமாள் வாத்தியார் எத்தகைய மனிதர் என்பது தெரிந்த இடத்தில் இருந்து நடிப்பில் அவர் காட்டும் முகபாவங்கள் நிச்சயம் திரைக்கு புதுசு.

 

காவல்துறை உயர் அதிகாரிகளாக கௌதம் மேனன், சரவண சுப்பையா, சேத்தன், தமிழ் தனித்துவ நடிப்பில் மிளிர்கிறார்கள். தலைமைச் செயலாளராக ராஜீவ் மேனன். தனக்குள்ளான பதட்டத்தை கூட நடிப்பில்அவர் கடத்துவது தனி அழகு. மந்திரியாக இளவரசு போலீஸ் அதிகாரிகளிடம் பொங்கி வழியும்ஆரம்பக் காட்சிகள் ஜோர்.

பெருமாள் வாத்தியாரை காடு வழியே கடத்திச் செல்லும் அத்தனை இடங்களும் வேல்ராஜி ன் கேமராவில் அழகுப் பதிவுகளாகி ஆச்சரியமூட்டுகின்றன. இளையராஜா இசையில் பாடல்கள் பரம சுகம். பின்னணி இசை மனதை வருடிக் கொடுக்கும் பணியை கச்சிதமாக செய்து விடுகிறது.

வெற்றிமாறன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கம் வளர்ந்த விதம் தொடங்கி ஆயுதப்படை யாக அது மாறும் அளவுக்கு நேர்ந்த சம்பவங்களை இயல்பாகவே பட்டியலிட்டு இருக்கிறார். கூடவே காவல்துறையின் நரித்தன செயல்பாடுகளையும் நச்சென சுட்டிக்காட்டி இருப்பது இயக்கச் சிறப்பு.

சூரியின் மனமாற்றம், அதைத் தொடர்ந்து கிளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு மனித நேயத்தின் இன்னொரு பக்கம்.

விடுதலை-2 திரை மூலம் ஒரு செங்கொடி வரலாறு.

 

Related posts

Leave a Comment