திரு. மாணிக்கம் – திரை விமர்சனம்

கேரள மாநிலம் குமுளியில் சின்னதாய் ஒரு லாட்டரி கடை நடத்தும் மாணிக்கம் நேர்மையின் அவதாரம். கிடைக்கிற கொஞ்சம் வருமானத்தில் மனைவி இரண்டு குட்டி மகள்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு நாள் கடைக்கு வந்த வெளியூர் பெரியவர் ஒருவர் இரண்டு லாட்டரி சீட்டு வாங்கும் நேரத்தில் அவரது வசம் இருந்த பணம் தொலைந்து போனது தெரிய வர, அந்த சீட்டுகளை பத்திரமாக வைத்திருக்கும்படியும் திரும்ப வரும்போது காசு கொடுத்து வாங்கி செல்வதாகவும் கூறிவிட்டு போகிறார். ஆனால் அவர் வாங்கி இருந்த ரெண்டு சீட்டில் ஒரு சீட்டுக்கு ரூபாய் ஒன்றரை கோடி பரிசு கிடைக்கவே, முகவரி கூட தெரியாத நிலையில் பெரியவரை தேடி பஸ்ஸில் பயணப்படுகிறார்.

இதற்கிடையே கணவருக்கு சாப்பாடு கொண்டு வரும் மனைவி கடை பூட்டி இருப்பதை கண்டு பக்கத்து கடையில் விசாரிக்கிறார். பக்கத்து கடையிலும் விவரம் எதும் சொல்லாமல் போனதால் கணவரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்கிறார் மனைவி. அப்போது மாணிக்கம் நடந்ததை சொல்ல, காசு கொடுத்து வாங்காத அந்த சீட்டு நமக்கே உரியது என் மனைவி கணவரை திசை திருப்ப முயல, மாணிக்கமோ தன் கொள்கையில் உறுதியாக இருக்க, ‘உன் நேர்மையை தூக்கி அடுப்பில் போடய்யா. இப்போ உடனே திரும்பி வாய்யா’ என்கிறது மொத்த குடும்பமும்.

ஏற்கனவே கடனில் இருக்கிறது மாணிக்கம் குடும்பம். இது போதாது என்று இரண்டாவது மகளுக்கு வாய் பேசுவதில் பிரச்சனை. இதற்காக லட்சங்களில் செலவாகும் என்கிறார் டாக்டர். இதையெல்லாம் சொல்லி மறுபடியும் மாணிக்கத்தின் மனதை கரைக்க பார்க்கிறது குடும்பம்.

இது போதாது என்று போலீஸின் உதவியையும் அவர்கள் நாட, போலீஸ் இந்த லாட்டரி சீட்டை அபகரிக்கும் நோக்கில் மாணிக்கத்தை பாதி வழியில் மடக்க துடிக்கிறார்கள். இதற்கிடையே டீ டைமுக் காக பஸ் பத்து நிமிடம் நிற்க, கீழ இறங்கிய மாணிக்கத்திடம்
இருந்து லாட்டரி சீட்டு இருந்த பையை திருடன் ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஓட…
அந்த லாட்டரி சீட்டு மீட்கப் பட்டதா… உரிய வரிடம் போய் சேர்ந்ததா என்பது உணர்வும்
நெகிழ்வுமான கிளைமாக்ஸ்.

மாணிக்கம் கேரக்டரில் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. மொத்த குடும்பமும் லாட்டரி சீட்டுடன் திரும்பி வரச் சொல்லி டார்ச்சர் கொடுத்தாலும் அசையாத மனஉறுதியை முகம் வழியே கடத்தி விடும் இடங்களில் இந்த மாணிக்கம் நடிப்பில் மரகத மாணிக்கம்.

நடுத்தர குடும்பத்து மனைவியாக மாணிக்கத்துக்கு கிடைத்த வைரமாக நடிப்பில் கொடி கட்டி இருக்கிறார் அனன்யா. கணவன் மீதான அவரது அன்பை லாட்டரிக்கு முன், லாட்டரிக்கு பின் என்று பிரிக்கலாம். தற்கொலை மிரட்டல் வரை விடுத்துப் பார்த்து அதற்கும் அசையாத அந்த கணவனை நினைத்து கொடுப்பார் பாருங்கள் ஒரு ரியாக்சன்… இப்போதும் கூட அது நடிப்பு என்று தோன்றவில்லை. அத்தனை யதார்த்தம். ஒரு சில காட்சிகளே என்றாலும் நாசர் மனதில் நின்று போகிறார்.

அந்த குட்டி குழந்தைகள் நடிப்பில் இன்னொரு அதி அற்புதம். ஓரிரு காட்சிகளே என்றாலும், பாரதிராஜா வரும் இடங்கள் நெஞ்சம் நெகிழ்த்த வல்லவை. அவரது மனைவியாக வடிவுக்கரசி சாந்தமிகு பாந்தம்.

போலீஸ் வகையறாக்களில் கருணாகரன் தனித்து தெரிகிறார். இளவரசு, சின்னி ஜெயந்த், ஸ்ரீமன், சாம்ஸ் பொருத்தமான பாத்திரத் தேர்வுகளில் பளபளக்கிறார்கள். யுகே ரிட்டர்னாக வரும் தம்பி ராமையா சரியான இம்சை ராமையா.

இசையும் ஒளிப்பதிவும் கதையோடு கலந்து போன மேஜிக்.
நந்தா பெரியசாமி எழுதி இயக்கி இருக் கிறார். லாட்டரி தொடர்பான கதைகள் ஏற்கனவே வந்திருந்த போதிலும் இந்தப் படத்தில் வித்தியாசமான காட்சி அமைப்புகள் மூலம் படத்தை தூக்கி நிறுத்தி விடுகிறார். சரியான பாத்திரத் தேர்வுகள் படத்தின் இன்னொரு பலம்.

இந்த மாணிக்கம் கொண்டாடப்பட  வேண்டியவன்.

Related posts

Leave a Comment