பூர்வீகம் – திரை விமர்சனம்

குடும்ப பின்னணியில் விவசாயத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.அந்த கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது தாத்தா, அப்பாவை போல அல்லாமல் மகன் கதிரை பட்டணத்தில் மேற்படிப்பு படிப்பு படிக்க வைக்கிறார். அதற்காக தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை விற்கிறார். படித்து முடித்ததும் அரசாங்க வேலை. அதைத் தொடர்ந்து பணக்கார குடும்பத்தில் மணப்பெண் என்று அமைய, போஸ் வெங்கட்டின் சந்தோசம் கூடிப் போகிறது.

இதன் பிறகு தான் பிரச்சனை. பங்களா வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கு கணவன் இருக்கும் பட்டணத்து வீடு சின்னதாய் தெரிய, பெரிய வீடு வாங்கினால் தான் கணவருடன் இருப்பேன் என்று கண்டிஷன் போடுகிறாள்.

இது தெரிந்த போஸ் வெங்கட், மகனின் சந்தோஷத்துக்காக மேலும் சில வயல் களை விற்று பணம் அனுப்புகிறார். இப்பொழுது புது வீடு அமைந்த மகிழ்ச்சியில் பேரனும் பிறந்த செய்தி தெரிய வர, மனைவியுடன் மகன் குடும்பத்தை பார்க்க பட்டணம் வருகிறார் போஸ் வெங்கட்.

வந்த இடத்தில் கணவன் மனைவி இருவருமே மருமகளால் அவமானப் படுத்தப்படுகிறார்கள். இதனால் மகனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் அவர்கள் சொந்த ஊருக்கு பயணப்பட,பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதை இளைய தலைமுறைக்கான பட மாகவே சொல்லி இருக்கிறார்கள்.

தந்தை சொல்படி கேட்கும் இளைஞன், மனைவியின் அடக்குமுறைக்கு படிந்து பெற்றோரை கவிக்க முடியாமல் தவிக்கும் நகரத்து குடும்பத் தலைவன், மகனை கண்டிக்க முடியாமல் உள்ளூர தவிக்கும் அப்பா என மூன்று மாறுபட்ட குணங்களிலும் நடிப்பில் தனித்துவம் காட்டியிருக்கிறார் கதிர்.
நாயகியாக வரும் மியாஸ்ரீ அந்த அப்பாவி கிராமத்து பெண் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். கதிரின் தந்தையாக போஸ் வெங்கட், தாயாக ஸ்ரீ ரஞ்சனி பாசமுள்ள பெற்றோராக மனதில் நிற்கிறார்கள். மகன் வீட்டுக்கு வந்த இடத்தில் மருமகளால் உதாசீனம் செய்யப்படும் காட்சி, இவர்களின் பாத்திரம் உணர்ந்த நடிப்பால் சிறப்பு பெறுகிறது. குறிப்பாக பேரன் என்றுதெரியாமலே டாஸ்மாக்கில் அவனுக்கு சரக்கு சப்ளை செய்யும் அந்த தாத்தா போஸ் வெங்கட் நடிப்பில் இன்னொரு பரிமாணம்.
கதிரின் மனைவியாக சூசன் வழக்கமான வில்லித் தனத்தில் கவர்கிறார். குறிப்பாக இவர் மனம் மாறும் இடங்களில் நிஜமாகவே திருந்தி விட்ட அந்த முக பாவனைகள் முத்துச்சரத்தின் ஜொலிப்பு.

சங்கிலி முருகன், இளவரசு, ‘பசங்க’ சிவகுமார் பொருத்தமான பாத்திரப்படைப்புகளில் நிரம்பி நிற்கிறார்கள்.இசையமைத்த சாணக்யாவின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கிராமத்து மண் மணம். விஜய் மோகனின் கேமரா அந்த கிராமத்து அழகை பசுமையாக நெஞ்சுக்குள் நிறுத்தி விடுகிறது.

எழுதி இயக்கி இருக்கிறார் ஜி. கிருஷ்ணன். படிப்புக்காகவோ தொழிலுக்காகவோ பட்டணத்துக்கு இடம் பெயரும் இளைஞர்கள் தங்கள் கிராமத்து மண்ணை மறந்து நகரத்தோடு ஐக்கியம் ஆகும் போது வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை சந்திக்கிறார்கள் என்பதை மண்வாசனை மாறாமல் சொல்லி இருக்கிறார். இந்த வகையில், சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா’ என்ற கேள்வியை ரசிகனுக்குள் எழுப்பி விடுகிறது, இந்த  பூர்வீகம்.

Related posts

Leave a Comment