பாட்டல் ராதா – திரை விமர்சனம்

மதுவின் கேடுகளை ஆணி அடித்து சொல்லியிருக்கும் படம்.மதுப்பழக்கம் தனி மனிதனின் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது மட்டுமின்றி அவன் குடும்பத்தின் நிம்மதியையும் எப்படி சீர் குலைக்கிறது என்பதை தெளிவான பார்வையோடு சொல்லி இருக்கிறார்கள்.

கட்டுமான தொழிலாளர் குரு சோமசுந்தரம் அந்த தொழில் நுணுக்கங்களில் தேர்ந்தவர். இதனால் அந்த துறையில் வளர்ந்து வரும் அவருக்கு அழகான மனைவி, அன்பான ஆண் பெண் குழந்தைகள் என நல்லதோர் குடும்பம் அமைகிறது. வாழ்க்கை சக்கரம் நிம்மதியாக சூழலும் நேரத்தில் பேரிடியாக அந்த குடும்பத்துக்கு அமைகிறது நாயகனின் திடீர் குடிப்பழக்கம். இதனால் அந்த குடும்பத்தின் நிம்மதி படிப்படியாக குலைகிறது. குடி நோயாளியாகவே மாறிவிட்டதால் நாயகனின் உடலும் சீர்கெடுகிறது.

மதுவின் கோரப்படியில் இருந்து இனி கணவரை மீட்க முடியாது என்று எண்ணும் மனைவி இப்போது ஒரு அதிரடி முடிவெடுக்கிறாள். அந்த முடிவால் கணவன் குடி நோயிலிருந்து மீட்கப்பட்டானா… அல்லது இன்னும் மோசமான குடி நோயாளி ஆனானா என்பதை நெகிழ்ச்சியாக காட்சிப்படுத்தியி ருக்கும் திரைப்படம்.

நாயகனாக வரும் குரு சோமசுந்தரம் நடிப்பால் ஒரு குடி நோயாளியை கண் முன் நிறுத்துகிறார். தான் செய்வது தப்பு. இதனால் தனது குடும்பம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தும் அந்தக் குடிநோய் மீண்டும் மீண்டும் அவரை மதுக்கடலில் தள்ளிப் பார்க்கும் அத்தனை இடங்களிலும் உச்சம் தொடுகிறது அவர் நடிப்பு.

குரு சோமசுந்தரத்தின் மனைவியாக சஞ்சனா நடராஜன் ஒல்லி உடம்பு. கில்லி நடிப்பு. குடிகார கணவனை அவர் பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் இம்மாதிரி பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளின் சோக முகம் தெரிகிறது, அவர் நடிப்பில். கணவன் திருந்தவே மாட்டான் என்று அவர் எடுக்கும் அதிரடி முடிவு, பிறகு
இந்த குடிகாரனுக்காக நாம் ஏன் விபரீத முடிவு எடுக்க வேண்டும் என்று கணவனிடமே சொல்லும் இடம் என வரும் அனைத்து காட்சிகளிலும் நடிப்பு மகுடம் தானாக இவர் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
ஜான் விஜய் என்றாலே ஓவராக கூவுவார் என்ற எண்ணத்தை அடியோடு துடைத்து போடுகிறது இந்த படத்தின் அவரது கேரக்டர். அந்த கேரக்டரில் அடக்கி வாசித்து இப்படியான நடிப்பையும் தனக்கு தர முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். குறிப்பாக தன் முன் கதை சொல்லும் அந்த பிளாஷ்பேக் நிச்சயம் கண்களில் நீர்த் திவலைகளை உற்பத்தி செய்யும்.அவர் கண்களைப் போலவே நம் கண்களிலும் நீர்க் குவியல்.

இறுக்கமான காட்சிகளிலும் மனசை லேசாக்குகிற நடிப்பு தந்திருக்கிறார், லொள்ளு சபா மாறன்.ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கேமரா காட்சிகளை மனதோடு இயல்பாக இணைத்து விடுகிறது. ஷான் ரோல்டன் இசையில் காட்சிக்கேற்ற பாடல்கள் அமைந்து ரசிக்க வைக்கிறது.

எழுதி இயக்கி இருக்கிறார் தினகரன் சிவலிங்கம். கொஞ்சம் அசந்தால் கூட பிரச்சார படமாகி விடக்கூடிய ஒரு கதையை தனது திரைக்கதை மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் மகிழவும் நெகிழவும் வைத்து ஜன ரஞ்சக ரசிகனுக்கு நெருக்கமாகி இருக்கிறார்.

மது பழக்கத்தினால் குடும்பங்கள் எப்படி சீரழிகிறது? குடி நோயாளிகளை சரி செய்ய அவர்களுக்கான மறுவாழ்வு மையம் எப்படி செயல்படுகிறது? மது பழக்கத்திலிருந்து மீண்டவர்களின் அடுத்த கட்ட நிலை என்ன என்பதை அடுத்தடுத்த காட்சிகளாக்கி தேர்ந்த இயக்கத் திறன். இனி பாட்டிலை கையில் எடுக்கும் ஒவ்வொரு குடிமகனையும் யோசிக்க வைக்கும்.
விதத்தில் திரை கண்டஇந்த பாட்டல் ராஜா நிச்சயம் விருதுக்கானவன்.

Related posts

Leave a Comment