இளம் தொழிலதிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலை வழக்கில் விசாரணை செய்யும் அதிகாரிகளால் எந்தவித துப்பும் துலங்காமல் போன நிலையில், ஏற்கனவே சஸ்பெண்டாகி இருக்கும் சுந்தர் சி. யிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார் போலீஸ் கமிஷனர்.
பணியில் இல்லாத நிலையிலும் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு துப்புதுலக்க புறப்படுகிறார் சுந்தர் சி. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஒப்புக்கொண்ட பின்னணியில் அவரது தனிப்பட்ட இழப்பு ஒன்றும் இணைந்திருப்பதால் தனது அதி வேக விசாரணையை தொடங்குகிறார்.
இதற்கிடையே கொலையானவரின் கைவசம் இருந்த ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதிகளும் போலீஸ் அதிகாரிகளும் சுந்தர் சி.யின் ஒவ்வொரு ஆட்டத்தையும் கலை த்துப்
போடுகிறார்கள். இதையெல்லாம் மீறி சதிகளை தகர்த்து தடைகளை உடைத்து கொலையாளியை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது திகு திகு திரைக்களம்.
ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ரசிகனுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் விதத்தில் இந்த வல்லான் வல்லவன் ஆகி இருக்கிறான்.பணியில் சஸ்பெண்ட் ஆன நிலையில் வழக்கு என்று வந்த பிறகு அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும் கேரக்டர் சுந்தர் சி.க்கு. அதை அதிரடி தடாலடியோடு அவர் வெளிப்படுத்தி இருக்கும் வேகம் நேர்த்தியானது. மனைவியின் கொடூர நிலையறிந்து துடித்து கதறும் இடத்தில் பாசமிக்க கணவனாகவும் நடிப்பில் தன்னை நிலை நிறுத்தி விடுகிறார்.
நாயகியாக வரும் தன்யா ஹோப் தன்னைப் பெண் பார்க்க வந்த சுந்தர் சி. யி டம் பிடிக்கவில்லை என்று சொல்லும் இடம் தொடங்கி. அடுத்த அடுத்த சந்திப்புகளில் சுந்தர் சி. பிடித்துப் போகும் வரை நடிப்பில் அழகான காதல் தடம் பதிக்கிறார்.
கவர்ச்சிக்கு ஹெபா பட்டேல். அப்படியே கொஞ்சம் நடிப்பும் வருகிறது.
இளம் தொழிலதிபராக கமல் காமராஜ், அவரது மனைவியாக அபிராமி வெங்கடாசலம், அவரது கோடீஸ்வர தந்தையாக, பாதராக ஜெயக்குமார், மகளை பறிகொடுத்த தாயாக சாந்தினி தமிழரசன் அரசியல்வாதியாக தலைவாசல் விஜய் பொருத்தமான கேரக்டர்களில் கதை ஓட்டத்துக்கு உதவுகிறார்கள். ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் கேமரா ஊட்டியை பியூட்டியாக காட்ட, தயாநிதி இசை நெஞ்சுக்குள் புது ராகம் மீட்டுகிறது.
ஒரு கொலையை சுற்றி நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளை கொண்ட ஜெட் வேக திரைக்கதை படத்தின் முழு முதல் பலம். எழுதி இயக்கிய வி.ஆர்.மணி சேயோன் சுவாரஸ்ய வடிவமைப்பில், இறுதி வரை ஊகிக்க முடியாத காட்சி அமைப்பில் ரசிகனுக்கு படைத்திருப்பது விறு விறு சஸ்பென்ஸ் தீனி.