சிறுவயதில் அம்மாவை இழந்த ராஜா மனதளவில் பாதிக்கப்படுகிறார். மருத்துவரும் தாயின் அன்புக்கு ஈடாக இன்னொரு அன்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவான் என்று நம்பிக்கை தர….
இந்த சூழலில் காட்டில் இருந்து ஊருக்குள் வந்த ஒரு குட்டி யானை ஊரையே நடுநடுங்க வைத்த நேரத்தில் அந்த யானையை தனது அன்பான நடவடிக்கைகளால் ராஜா இயல்புக்கு கொண்டு வருகிறான்.
இப்போது மகன் ராஜா முகத்தில் மீண்டும் மலர்ச்சியை பார்த்த அவனது அப்பா யானைக்கு பீமா என பெயரிட்டு வனத்துறை அனுமதியுடன் வீட்டிலேயே வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ராஜா வளர்க்கும் யானை பீமாவை அரசு சார்பில் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்கிறார்கள் வனத்துறை ஊழியர்கள். ராஜா முகாமுக்கு சென்று பார்க்கும் போது பீமா அங்கில்லை. வேறு யானையை காட்டி இதுதான் அவரது யானை என்று ஏமாற்றுகிறது வனத்துறை.
இதனால் பீமா விஷயத்தில் ஏதோ சதி நடந்திருப்பதை உணர்ந்து கொண்ட ராஜா, பீமாவை தேடுகிறான்
உண்மையில் பீமா கடத்தப்பட்ட பின்னணியில் இருக்கும் அபாயம் என்ன என்பது சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ்.
ராஜாவாக ஆரவ். அந்த கேரக்டரில் அழகாக பொருந்திப் போகிறார். ஆக்ஷனில் ஒரு கை பார்க்கிறார். நடிப்பிலும் முன்னேற்றம் தெரிகிறது. காதலியுடனான காட்சிகளை விட யானை மீதான அன்பை கொட்டும் காட்சிகள் அதிகம். யானைக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.
நாயகியாக வரும் ஆஷிமா நர்வால் காதலுக்கும் ஒரு பாட்டுக்கும் வந்து போகிறார்.
நாயகனின் அப்பாவாக நாசர் தனது அனுபவ நடிப்பில் கதைக்கு பலம் சேர்க்கிறார்.
அமைச்சராக வரும் கே. எஸ் ரவிக்குமார் அலட்டல் இல்லாத நடிப்பில் பிற்பகுதி படத்தில் ஸ்கோர் செய்கிறார். இரண்டொரு காட்சி என்றாலும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி ததும்ப வந்து மனம் நிறைக்கிறார். ஒரு காட்சியில் ஓவியாவும் வந்து போகிறார்.
யோகி பாபு கே.எஸ்.ரவிகுமாரின் வளர்ப்பு மகனாக வந்து காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். பாகுபலி பிரபாகர், சாயாஜி சிந்து ராகவன் ஜெயக்குமார் ஏற்ற கேரக்டருக்கு நடிப்பில் சிறப்பு சேர்க்கிறார்கள்
இசை அமைப்பாளர் சீமான் கே.கிங்கின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா யானை சம்பந்தப்பட்ட காட்சிகளில் பார்வையாளர்களை வசப்படுத்தி விடுகிறது.
நரேஷ் சம்பத் எழுதி இயக்கி இருக்கிறார். யானையை மையமாக வைத்து பாசம் பரிவு என்று ஆரம்பத்தில் படத்தை கலகலப்பாக கொண்டு போகிறார். சதி திட்டங்கள் நிறைந்த பிற்பகுதி சஸ்பென்ஸ் வீரர்களுக்கு ஆவலான வேட்டை ஆகி விடுகிறது.
மொத்தத்தில் இந்த ராஜ பீமா, கம்பீரம்.