அஸ்திரம் – திரை விமர்சனம்

மூன்று இளைஞர்கள் அடுத்தடுத்து பொது இடத்தில் வயிற்றை கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள். ஒருவரை ஒருவர் உயிரோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டதே இல்லை. இந்த தற்கொலை விவகாரம் காவல்துறைக்கு தலைவலியாய் அமைய… இந்த தற்கொலைகளுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களை காவல்துறை கண்டுபிடித்ததா? என்பது திருப்பு முனைகளுடன் கூடிய கிளைமாக்ஸ்.

இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யும் பொறுப்பு கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஷாமை தேடி வருகிறது. முதல் கட்ட தகவலாக இவர்கள் மூவருக்கும் பொதுவாக இருப்பது நன்றாக செஸ் விளையாடும் திறமை என்பதை அறிந்து கொள்ளும் ஷாம், தனது உதவியாளர் சுமனுடன் இணைந்து இந்த வழக்கை தீவிரமாய் துப்பு துலக்குகிறார்.

விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் திடீரென்று இவரை பார்க்க வருகிறார், பள்ளிக்கால நண்பன் விஜய். ஷாமுக்கு மட்டுமே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான தகவல்களை விஜய் மளமளவென கொட்டுகிறார். அதுவரை ஷாம் நடத்திய விசாரணைகளை கூடவே இருந்து பார்த்தது போல் அத்தனையும் உண்மையாய் இருக்க, அதிர்ந்து போகிறார் ஷாம். இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்? என்று கேட்கத் தொடங்குவதற்குள் ஷாம் கண் முன்பே அந்த பழைய நண்பரும் தன் வயிற்றை கிழித்துக் கொண்டு உயிரிழக்கிறார். சாகும் முன்பு கடைசி வார்த்தையாக அவர் சொன்னது, “இதற்கெல்லாம் மார்ட் டின்தான் காரணம்.”

யார் அந்த மார்ட்டின்? Xஅவருக்கும் அடுத்தடுத்து நடந்த தற்கொலைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரிக்கத் தொடங்கும் ஷாமுக்கு தற்கொலைகளுக்கான பின்னணி தெரிய வருகிறது. ஷாமின் அடுத்த கட்ட வேட்டையில் அவன் சிக்கினானா என்பது திகு திகு திரைக்கதை.

துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ஷாம் வருகிறார். தற்கொலை செய்து கொண்ட மூவர் குடும்பத்திலும் அவர் விசாரணை நடத்தும் பாங்கு தேர்ந்த போலீஸ் அதிகாரியை கண் முன் கொண்டு வருகிறது.
அவரது ஜோடியாக வரும் நிரா, அந்த கேரக்டருக்குள் தாய்மையின்
ஏக்கத்தை வெளிப்படுத்துவது தனி அழகு. இளம் வயது வில்லனாக வரும் விதேஷ் யாதவ், பார்வையாலேயே பயமுறுத்துகிறார். கான்ஸ்டபிள் கேரக்டரில் வரும் சுமந்த் திருப்புமுனை கேரக்டராக மனதில் பதிகிறார்.

முக்கிய கேரக்டர்களில் வரும் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி சங்கர், வெண்பா பொருத்தமான பாத்திரத்தேர்வுகள் சுந்தரமூர்த்தி இசை காட்சிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. கொடைக்கானல் கல்யாணின் கேமராவில் இன்னும் அழகு.
அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியிருக்கிறார்.

விளையாட்டு பின்னணியில் நிகழும் பெரும் விபரீதத்தை மன்னர் கால கதையுடன் இணைத்து சொன்ன விதத்தில் அடடே சொல்ல வைக்கிறார். ஷாமின் உதவியாளர் சுமந்த் விஷயத்தில் அவர் வைத்திருக்கும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் டுக்கும் ஒரு சபாஷ்.

Related posts

Leave a Comment