தி டோர் – திரை விமர்சனம்

கட்டிடக்கலை நிபுணரான பாவனா வடிவமைக்கும் கட்டிட பணிக்காக சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது . கோவில் இடிக்கப்பட்ட அதே நாளில் பாவனாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதன் பிறகு பாவனாவை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. ஓரிரு முறை அவர் கண் முன் ஒரு அம்மாவும் பெண்ணும் ஆவி தோற்ற த்தில் அடிக்கடி வந்து போகிறார்கள். இதனால் பயந்து போகும் பாவனா, அந்த அமானுஷ்ய சக்தி பற்றி விசாரிக்க முயல்கிறார். அது தொடர்பாக அவர் யாரையெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாரோ அந்த நபர்கள் மறுநாளே இறந்து போன தகவல் தெரிய வருகிறது. அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கும் என்ன சம்பந்தம்?, அவரை பின் தொடரும் ஆவிகளின் பின்னணி என்ன? என்பதை திகிலும் திரில்லருமாய் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழில் கொஞ்சம் இடைவெளி விட்டு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா, தனது கேரக்டரை தனது அனுபவ நடிப்பின் மூலம் அழகாக மெருகேற்றி விடுகிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அடுத்த கட்ட நடவடிக்கையும் காட்சிகளோடு சுலபத்தில் நம்மை இணைத்துக் கொள்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு அந்த காக்கி சட்டை நடிப்பு கம்பீரம் தருகிறது. நாயகியின் அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, அலுவலக பாஸ் ஆக ஜெயப் பிரகாஷ் பாத்திரச் சிறப்பில் பளபளக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, தனது கேமராவில் கொடைக்கானலை இன்னும் அழகாக்கி இருக்கிறார். வருண் உன்னியின் பின்னணி இசை ஆவி வரும் காட்சிகளில் திகிலையும் சேர்த்து தருகிறது. எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், ஆவிகள் பின்னணியில் மனிதர்களின் பேராசையை இணைத்து கதை சொல்லி இருக்கிறார்.

பாவனா தேடும் ராம் யார்? என்ற தேடல் பயணத்தில் ஏற்படும் திருப்பங்கள் கிளைமாக்ஸ் வரை காட்சிகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. அம்மா மகள் சம்பந்தப்பட்ட அந்த பிளாஷ் பேக் தான் கதையின் மைய முடிச்சு. அதில் போதிய வலுவில்லாதது மட்டும் சிறுகுறை. என்றாலும் இந்த டோர் தட்டினதும் திறக்கும்.

Related posts

Leave a Comment