தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார், மருத்துவக் கல்லூரி மாணவரான பாலு s.வைத்தியநாதன். இதனால் அவருக்கு அந்த கல்லூரி தரப்பில் இருந்தும் அரசு தரப்பிலிருந்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் வருகின்றன.
இன்னொரு பக்கம், நாயகி அஞ்சனா கீர்த்தி ‘அறம் செய்’ என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்திக்கிறார். ஆனாலும் கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா? என்பது கிளைமாக்ஸ்.
கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் பற்றி பேசுகிறார். தங்கள் மருத்துவக் கல்லூரி தனியார் வசம் போய்விடக்கூடாது என்பதற்காக சிறு மாணவர் குழுவுடன் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கிறார். அதோடு கனவு காட்சி வைத்து மூன்று டூயட் பாடல்களில் நாயகி மேகாலியுடன் குத்தாட்டம் போட்டு திரை அரங்கில் கலகலப்பும் ஏற்படுத்துகிறார். ஒரு பாடலுக்கு பாரதியார் வேஷம் போட்டு நடிப்புலா வருகிறார். நிமிர்ந்த நன்னடை யும் நேர்கொண்ட பார்வையுமாக அறம் செய் அமைப்பின் தலைவராக அஞ்சனா கீர்த்தி வருகிறார் அந்த கம்பீர தோற்றம் அந்த கேரக்டருடன் அவரை கச்சிதமாக இணைத்துக் கொண்டு விடுகிறது.
லொள்ளு சபா ஜீவா, இந்த படத்தில் குணச்சித்திர நடிகராக இன்னொரு முகம் காட்டி இருக்கிறார். பாலு எஸ்.வைத்தியநாதனின் காதலியாக நடித்திருக்கும் மேகாலி, பாடல்களுக்கு நடனம் ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார். சீரியஸான உண்ணாவிரத காட்சியிலும் ‘ஒரு டீ இரண்டு மசால் வடை ‘ வசனம் பேசும் நடிகை சற்றே கலகலப்பு ஏற்படுத்துகிறார். முதலமைச்சராக ஜாக்குவார் தங்கம், அரசியல் கட்சி தலைவராக பயில்வான் ரங்கநாதன், ஆர்வக்கோளாறு எதிர்க்கட்சித் தலைவராக திருச்சி சாதனா காட்சிகளோடே கதையை கடத்தும் பணியை மேற்கொள்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இயக்குநர் பாலு எஸ்.வைத்தியநாதன் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகள் சமூகத்திற்கு அவசியமானது என்றாலும், அதை அளவுக்கு அதிகமான உரையாடல் மூலம்
சொல்ல முயற்சித்திருப்பது சோர்வைத் தருகிறது.
படத்தில் நிறைய பேர் நடிப்புக்கு புதியவர்கள். இதனால் அவர்கள் நடித்ததே நடிப்பு என்று ஆகி விடுகிறது. அரசியல் மாற்றம் பற்றி பேச வந்த இந்த படம் அதை ரசிகர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் அளவுக்கு பேசாதது பெருங்குறை. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி விட்டு இவர்கள் தங்கள் அரசியல் மாற்றத்தை செய்திருக்கலாமே என்ற கேள்வியும்
எழாமல் இல்லை. மொத்தத்தில் இந்த அறம் செய், நீண்ட நெடிய உபதேசம்…