மூன்று கேரக்டர் களை வைத்து ஒரு முத்தான கதை. அதை விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிற அறிமுக இயக்குனர் சஷி காந்துக்கு ஒரு சபாஷ்.
நட்சத்திர கிரிக்கெட் வீரராக கொண்டாடப்பட்ட சித்தார்த் கடைசி இரண்டு போட்டிகளில் சரியாக சோபிக்காததை காரணம் காட்டி அணியில் இருந்து விலகச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது கிரிக்கெட் வாரியம். சித்தார்த்தோ தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர விரும் பாமல், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே மற்ற காரியம் என்கிறார்.
தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்கிறார். ஆசிரியராக பணியாற்றும் அவரது மனைவி நயன்தாரா, கணவரின் லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த போதிலும் திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அதற்கான மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்கிறார். தற்போது மேற்கொள்ள இருக்கும் சிகிச்சை தான் குழந்தைக்கான கடைசி முயற்சி என்பதால் ஒருவித பதட்ட மனநிலையோடு அந்த சிகிச்சைக்கான பணம் புரட்டுவதில் தீவிரமாக இருக்கிறார். இந்த மூவரின் கடைசி வாய்ப்பையும் நடக்கவிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவு செய்கிறது. அது எப்படி என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.
தனது ஆராய்ச்சியை உலகமே கொண்டாடும் என எதிர்பார்த்து அதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் ஏமாந்து போகும் கேரக்டரில் மனதில் நிற்கிறார் மாதவன்.
வெற்றிக்காக அவர் எடுக்கும் அடுத்த கட்ட முயற்சியில்வில்லனாக மாறும் இடம் கதையின் திருப்புமுனைக்கான உச்சமும் கூட. பிரபல கிரிக்கெட் வீரராக வரும் சித்தார்த், அந்த கேரக்டரில் நடிப்பில் அற்புதமாக வெளிப்படுகிறார். மகன் கடத்தப்பட்ட சூழலில் விளையாடப்போகும் மனநிலையை நடிப்பில் வெளிப்படுத்தும் இடம் அடடா ரகம். மனைவியிடம் காணாமல் போன மகன் விஷயத்தில் அடக்கி வாசிக்க சொல்லும் இடத்திலும் நடிப்பில் அனுபவம் பேசுகிறது.
மாதவனின் மனைவியாக வரும் நயன்தாரா, குழந்தைக்காக ஏங்கும் காட்சிகள் தாய்மையின்பிரதிபலிப்பு.
பணத் தேவைக்காக கணவனின் தப்பாட்டத்தை சகிக்கும் இடத்தில் அந்த தடுமாற்ற மன நிலையை முகத்தில் அழகாக பிரதிபலிக் கிறார்.
சித்தார்த்தின் மனைவியாக மீரா ஜாஸ்மின். காணாமல் போன மகனை நினைத்து உள்ளூர வாடும் அன்னையை நடிப்பில் கொண்டு வந்து விடுகிறார்.மாதவனின் நண்பனாக காளி வெங்கட் குணசித்திரத்தில் வெளுத்து வாங்க, அதிரடி வில்லனாக பிரமோஷன் ஆகிறார் ஆடுகளம் முருகதாஸ்.
இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு இணைந்து கவனம் பெறுகிறது. கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹிலின் கேமரா படத்தின் இன்னொரு பிரமாண்டம்.
கிரிக்கெட் சூதாட் டத்தை மையப் படுத்திய கதைக்குள் ஒரு விஞ்ஞானியின் கனவு, அவன் மனைவியின் லட்சியம், கிரிக்கெட்டை உயிராக நினைக்கும் வீரனின் கௌரவம் என இணைத்த விதத்தில் இயக்குனர் சஷிகாந்த் ஆடி இருப்பது டெஸ்ட் மேட்ச் அல்ல. அதிரடியான ஒன் டே மேட்ச்.