மொத்தமாக விலை கொடுத்து வாங்க முடியாத பொருட்களை தவணை முறையில் வாங்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்த போது மக்களால் விரும்பிய பொருட்களை வாங்க முடிந்தது. இதுவே காலப்போக்கில் மாதத் தவணையில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற முடிவுக்கு மக்களை கொண்டும் வந்தது.
இந்த மாத தவணை இன்று பல குடும்பங்களில் மாதாந்திர வேதனையாகவும் உருமாறி இருக்கிறது. இந்த கதை களத்தை கருவாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஜாலியாகவும் கொஞ்சம் சீரியஸாக வும் சொல்கிற திரைக்கதை படத்தின் முழு முதல் பலம்.
நாயகன் சதாசிவம் நாயகி சாய் தன்யா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். காதலாகிறார்கள். காதலியை குஷிப்படுத்த மாத தவணையில் ஒரு பைக் வாங்குகிறார் நாயகன்.
இந்த காதல் திருமணத்தில் முடிந்த போது இப்போது காதல் மனைவியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த மாத தவணையில் ஒரு கார் வாங்குகிறார் நாயகன். இரண்டுக்கும் மாத தவணை கட்ட வேண்டிய நெருக்கடியான நேரத்தில் எதிர்பாராமல் நாயகனுக்கு வேலை போக…தொடர்ந்து மூன்று மாதம் பைக்குக்கு மாத தவணை கட்டாததால் அதை பறித்துச் செல்ல பணம் கொடுத்தவர்கள் அடியாட்களை அனுப்ப…கார் விஷயத்திலும் இதுவே நடக்க…ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து மிரட்டத் தொடங்க…
மாதத் தவணை பிரச்சனை அந்த குடும்பத்தை எப்படி ஆட்டிப் படைத்தது? அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை காமெடிக் களத்தில் சீரியஸ் தளத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
படத்தை இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் சதாசிவம். காதல் உணர்வுகள் முகத்தில் முழுமையாக எட்டிப் பார்க்க, தவணைக்காரர்களிடம் சிக்கிக் கொண்டு அல்லலுறும் காட்சியில் அந்தப் பதற்றத்தையும் நடிப்பில் அழகாக வெளிக் கொணர்கிறார். கிளைமாக்சில் ஆஸ்பத்திரியை ரணகளம் பண்ணும் இடத்தில்ஒரு நல்ல நடிகரை தந்த இயக்குனராகவும் ஜெயித்து விடுகிறார்.
இவருக்கு ஜோடியாக வரும் சாய் தன்யா மோதல் முற்றிய நிலையிலும் கணவரை விட்டுக் கொடுக்காத இடத்தில் நடிப்பில் கரகோஷம் வாங்குகிறார். காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் முகபாவம் காட்டி இருக்கலாம்.
சாய் தன்யாவின் தந்தையாக டைரக்டர் பேரரசு, அந்த பாத்திரத்துக்கு நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார். நாயகனின் அம்மாவாக செந்திகுமாரி, குடித்துவிட்டு வரும் மகனுக்காக மருமகளிடம் பரிந்து பேசும் இடத்தில் தேர்ந்த நடிப்பில் தாய்மைக்கு பெருமை சேர்க்கிறார். நாயகனின் நண்பராக பிளாக் பாண்டி மற்றும் சன் டிவி ஆதவன், லொள்ளுசபா மனோகர் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். நாயகனின் முதலாளியாக வரும் ஓ ஏ கே சுந்தர் அந்த கேரக்டருக்கு தனது நடிப்பால் கம்பீரம் சேர்க்கிறார்.
இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுகம் சுகம் பரம சுகம்.மாதத் தவணை பிரச்சனையை நடுத்தர குடும்பங்கள் உஷாராகும் விதத்தில் கதை அமைத்த விதத்துக்காகவே இயக்குனர் சதாசிவத்தை கொண்டாடலாம். மிடில் கிளாஸ் மாதவன்கள் வீட்டில் இவர் தொங்க விட்டு இருப்பது நல்லதொரு எச்சரிக்கை மணி.