அக்கா-தம்பியின் அளவு கடந்த பாசம் தம்பியின் இல்லற வாழ்க்கையையே பாதிக்க நேர்ந்தால்….அதுதான் இந்த மாமன் கதை.
கிராமங்களில் தாய் மாமன் உறவு உன்னதமானது. அப்படி ஒரு மாமனை திரைக்கு தந்து இருக்கிறார்கள். 10 வருடமாக குழந்தை இல்லாமல் அவமானத்தை மட்டுமே வெகு மானமாக பெற்றுக் கொண்டிருந்த தனது அக்காவுக்கு இப்போது மகன் பிறக்கிறான். பிறக்கும் மகன் அந்த தாய் மாமனுக்கு முழு நேர சந்தோஷமாகிறான். தூங்கும்போது கூட மாமனை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் அந்த சிறுவன், அதே மாமனுக்கு திருமணம் ஆகும்போது மாமன் குடும்பம் பிரிய காரணமாகிறான் பிரிந்த அக்கா தம்பி குடும்பம் மீண்டும் இணைந்ததா என்பது பாசமும் நேசமுமான திரைக்கதை.
சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு தம்பி என்றால் உயிர். அதே மாதிரி தம்பியும் அக்காவை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான். இந்த அக்காவுக்கு பத்து வருடத்திற்கு பிறகு பிறந்த பையனை தாய் மாமன் சூரி தாங்குதாங்கென்று தாங்குகிறார். பெற்ற தந்தையையே மகனின் அன்புக்கு ஏங்க வைக்கும் அளவுக்கு மாமன் மருமகன் பாசம் பொங்கி வழிகிறது.
அக்காவின் பிரசவத்துக்காக அங்கிருந்த இளம் பெண் டாக்டர் ஐஸ்வர்ய லட்சுமியை அசைத்துப் பார்க்கிறது. அக்காவையும் அவள் குடும்பத்தையும் இப்படி நேசிக்கும் ஒருவன் நமது வாழ்க்கைத் துணையானால் நம்மிடமும் அதே அன்பை கொட்டுவான் என்று நம்புகிறாள். அந்த நம்பிக்கையே அவன் மீது காதலாகவும் மாறுகிறது.
பிறகென்ன, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்.
முதல் இரவில் தான் பிரச்சனை. நானும் மாமன் கூடவே படுத்துக் கொள்வேன் என்று அடம் பிடிக்கும் அக்கா மகன் அடுத்தடுத்த வெற்று இரவுகளில் புதுப் பெண்ணை எரிச்சலுக்கு உள்ளாக்க…இதனால் மதுரைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு கணவருடன் ஐஸ்வர்யா இடம் பெயர… அதற்குப் பின்பும் அந்த மாமா மருமகனின் அதீத பாசம் இருவர் குடும்பத்திலும் விரிசலை ஏற்படுத்த…இதற்கிடையே ஐஸ்வர்யாவும் தாய்மை அடைய…இந்த நேரத்தில் மாமனைப் பிரிந்து வாடும் மகனை அந்தப் பிரிவில் இருந்து மீட்டெடுக்க சுவாசிகா செய்யும் விபரீத செயல் இரு குடும்பங்களுக்குள்ளும் பெரும் பிள வை ஏற்படுத்தி விடுகிறது.
பிரிந்த குடும்பம் இணைந்ததா? அல்லது வீம்பு வென்றதா என்பதை உருக உருக சொல்லி இருக்கிறார்கள்.சூரியின் நாயக நடிப்பில் இந்த மாமனுக்கு தனி இடம் உண்டு. பாச மிக்க தம்பியாக, தாய் மாமனாக, மனைவியின் காதல் கணவனாக படம் முழுக்க சூரியின் ராஜ்யம் தான். அக்கா தாய்மைப் பேறு அடைந்து விட்டாள் என்று தெரிய வந்தது முதல் அந்த தாய் மாமனின் பாசப் பரவல் தனி ரகம். தனது அக்கா குடும்பமா? அல்லது உயிரான மனைவியா என்று அவர் தடுமாறும் இடங்கள் சூரியின் நடிப்பை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்று விடுகிறது.
சூரியின் காதல் மனைவியாக ஐஸ்வர்ய லட்சுமி அன்பிலும் ஆவேசத்திலும் இருவேறு நிலைகளை நடிப்பில் அற்புதமாக பிரதிபலிக்கிறார். அவரது பேசும் கண்களில் தான் எத்தனை எக்ஸ்பிரஷன்கள்… அக்கா குடும்பத்தின் உறவுக்காக எந்த எல்லைக்கும் போகும் கணவனை புழு போல் பார்க்கும் இடத்தில் நடிப்பிலும் ஐஸ்வர்யம்.சூரியின் அக்காவாக வரும் சுவாசிகா தம்பி மனைவியிடம் சண்டைக் கோழியாக எகிறும் இடத்தில் நடிப்பில் சிக்சராக விளாசித் தள்ளுகிறார்.
சுவாசிகாவின் கணவர் பாபா பாஸ்கர் மனைவிக்கும் அவள் தம்பிக்குமான பாசப் போராட்டத்துக்கிடையே அல்லாடும் கேரக்டரை அழகுற செய்து இருக்கிறார்
தாத்தா பாட்டியாக ராஜ்கிரண் -விஜி சந்திரசேகர் பாத்திரப் படைப்பு கிராமத்து எதார்த்த வார்ப்பு. இறந்து போன மனைவியை அவள் தூங்குகிறாள் என்று ராஜ்கிரண் சொல்லும் இடத்தில் துவளாத மனமும் துவளும்.மகள் வீட்டில் மகன் போட்டோவை சாமி கோலத்தில் பார்த்த தும் உடைந்து நொறுங்கும் அம்மா கேரக்டரில் கீதா கைலாசம் ஆஸம்.மகள் கோபத்தில் தாய் வீடு வந்த நேரத்தில் மாமா ஜெயப்பிரகாஷ் மருமகன் சூரியை சந்தித்து பேசும் இடம் அடடா ரகம்.காமெடிக்கு பால சரவணன்.ஹே ஷாம் அப்துல்லாவின் இசையும் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் இந்த பாச உறவுக் கதையின் பக்கத் தூண்கள்.
சூரியின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். கிராமத்து பாசமிகு அக்கா தம்பியின் உறவுப் போராட்டங்களை நெஞ்சம் நெக்குருக சொல்லி ஒவ்வொரு தாய் மாமனையும் கௌரவப் படுத்துகிறார். .ராஜ்கிரண்-விஜி சந்திரசேகர் தம்பதிகள் மூலம் சூரி குடும்பத்திற்கு அவர் நடத்தும் பாடம் சிறப்பானது. ஆஸ்பத்திரி கிளைமாக்ஸ் காட்சியில் கணவன்-மனைவி உறவின் உன்னதம் கண்களை ஆனந்த கண்ணீருக்கு உரியதாக்கி விடுகிறது.
மகத்தானவன் இந்த மாமன்.