யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் சந்தானம். படம் பிடிக்காவிட்டால் வெளுத்து வாங்கி விடுவார். இதனாலேயே படம் ஓடாது.
இந்நிலையில் ஒரு திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு சந்தானத்தை தேடி வர…
அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் புதிய படம் பார்க்கும் ஆர்வத்தில் அந்த திரையரங்கத்திற்கு செல்ல…
அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற சந்தானமும் செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள்.
சைக்கோ கிரைம் திரில்லர் படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து அதிர்ந்து போகும் சந்தானம், அந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்கிறார் என்பதை காமெடி பாதி, களேபரம் மீதி என சொல்லி இருக்கிறார்கள்.
யூடியூபராக வரும் சந்தானம் நடை உடை பாவனை எல்லாவற்றிலும் மாறித் தெரிகிறார். வாயைத் திறந்தாலே சிரிப்பு என்பது இந்த படத்திலும் மேஜிக்காக நடந்தேறுகிறது.
நாயகியாக வரும் கீத்தி திவாரி திரைப்படத்தில் பேயாக மாறிய பிறகு நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.
இயக்குநர்கள் கெளதம் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் என புதிய காமெடி கூட்டணி படத்தில் அமைந்த போதும் மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்து சந்தானம்
அடிக்கும் காமெடிக் களேபரம் தான் அரங்கை பெரிய அளவில் கலகலப்பாக்குகிறது.
லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லியும் சிரிப்புக்காக வந்து போகிறார்கள்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களை விட, பின்னணி இசை தூக்கலாக அமைந்து ஹாரர் காட்சிகளை ரசிக்க வைக்கின்றன
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி திகில் கதைக்கேற்ற வண்ணத்தில் கேமராவை சுழல விட்டு பார்வையாளர்களின் படபடப்புக்கு சொந்தமாகி இருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், காமெடி பின்னணியில் ,திகில் திரைப்படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் ஹீரோ குடும்பத்தை கதைக்களம் ஆக்கி இருக்கிறார். இம்மாதிரி ஹாரர் கதைகளில் நகைச்சுவை இரண்டாம் பட்சமாகிவிடும். ஆனால் அதில் நகைச்சுவை இணைந்து வருகிறது என்பது படத்தின் சிறப்பு. இயக்குனரின் சிறப்பும்கூட.