தக் லைப் – திரைவிமர்சனம்

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால்… இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு அதிரடி சதிராட்டம் ஆடி இருக்கிறார்கள். டெல்லியில் பிரபல கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேலுக்கும்( கமல்ஹாசன்), போலீசுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டையில் அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாக… இதனால், அவரது மகன் அமரன் ( சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்க, தங்கை சந்திராவோ (ஜஸ்வர்யா லட்சுமி) காணாமல் போகிறார்.

இந்நிலையில், அமரனை தத்தெடுத்து மகன் போல வளர்க்கிறார் சக்திவேல்.

இச்சூழலில், சக்திவேலுவின் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர் ) மகள் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு, கேங்ஸ்டர் தலைமையை அமரனிடம் ஒப்படைத்து விட்டு, சிறைக்குச் செல்கிறார் சக்திவேல். இதனால் அமரன் மேல் கடுப்பாகிறார் மாணிக்கம். இந்நிலையில் சிறையில் இருந்து ரிலீஸான சக்திவேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரித்து பார்த்த சக்திவேலுவுக்கு அமரன் மீது சந்தேகம்.

இது தெரிய வந்தபோது ‘அமரன்’ தனக்குள் உடைந்து போக… இதற்காக காத்திருந்த மாதிரி ‘மாணிக்கம்’ நாசர் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் பகவதி ஆகியோர் சிம்புவை திசை திருப்பி சக்திவேலை கொல்லும் அளவுக்கு அவன் மனதை மடை மாற்றம் செய்கிறார்கள். இதன் பிறகு நடந்ததெல்லாம் அதிர்ச்சியின் உச்சம். சிலம்பரசனால் சுடப்பட்டு அதல பாதாளம் போகிறார்
சக்திவேல்.
இதன் பிறகு, ‘இனி ரங்கராய சக்திவேல் இங்கே நான்nதான்’ என அறிவிக்கிறார் சிம்பு.

இதன் பின்னர், அதிரடி திருப்பங்களாய் என்னென்ன நிகழ்கின்றன என்பது திகு திகு திரைக்கதை இளமை, முதுமை என இருவேறு காலங்களிலும் ரங்கராய சக்திவேலுவாகவே வாழ்ந்திருக்கிறார் கமல். அவருக்கு இணையான அமரன் கேரக்டரில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிலம்பரசன்.

கமலின் மனைவி ஜீவாவாக அபிராமி அந்த கேரக்டரில் அற்புதமாக வெளிப்பட்டு இருக்கிறார். மும்பையில் 12 வயதில் சித்தப்பா வால் விற்கப்பட்ட இந்திராணி கேரக்டரில் திரிஷா, கதைக்குள் ஒட்டாத உடைந்த பாத்திரமாய் வந்து போகிறார்.
அசோக் செல்வன், சானியா மல்கோத்ரா தங்கள் கேரக்டர்களில் பளிச்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஜிங்குச்சா’ பாட்டு சுகம். ரவி கே சந்திரன் கேமரா காட்சிகளோடு ஐக்கியப் படுத்தி நிஜமாகவே மாயாஜாலம் காட்டுகிறது.
38 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம்-கமல் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். இவர்களின் எவர்கிரீன் படைப்பான நாயகனை எதிர்பார்த்து வருபவர்களுக்கு இது வேறு லெவல் படம் என்பதை காட்சி வழியே கன்ஃபார்ம் செய்து விடுகிறார்கள். அந்த வகையில் இந்த தக் லைப், நிஜமாகவே திக் லைப்.

Related posts

Leave a Comment