ரெட்ட தல – திரைப்பட விமர்சனம்

பாண்டிச்சேரியில் பெற்றோர் இன்றி அனாதையாக வாழும் அருண் விஜய், தன்னைப் போலவே யாருமின்றி அனாதையாக இருக்கும் சித்தி இத்னானியை காதலிக்கிறார். ஆனால், சித்தி இத்னானிக்கோ காதலை விட பணத்தின் மீது அதீத மோகம்.
காதலியை சந்தோஷப்படுத்துவதற்காக அதிக பணம் சம்பாதிக்கும் முடிவுக்கு வரும் அருண் விஜய்க்கு, பணக்கார அருண் விஜய்யின் நட்பு கிடைக்கிறது. பணக்கார அருண் விஜய்யின் பணத்தின் மீது ஆசைப்படும், சித்தி இத்னானி, பணக்கார இளைஞனின் அதே சாயலை கொண்ட தன் காதலர் அருண் விஜய் மூலம் அவரது பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். அதன் பிறகு நடப்பதெல்லாம் அதிரி புதிரி ஆட்டம்.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், உடை மற்றும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கணிசமான வேறுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் பல இடங்களில் ரிஸ்க் எடுத்து இருக்கும் அருண் விஜய், படத்தை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறார்.
காதலை தூக்கி ஓரத்தில் வை. பணத்தை தூக்கி பக்கத்தில் வை. இதுதான் படத்தில் நாயகி சித்தி இத்னா னிக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர். அவரும் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பால் தங்களை நிரப்பி இருக்கிறார்கள். முழு படத்தையும் ஸ்டைலிஷ் ஆக காட்சிப்படுத்தியிருக்கிறது
டிஜோ டாமியின் கேமரா.

சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் பாடிய “கண்ணம்மா..” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. காட்சிகளின் விறுவிறுப்புக்கு பின்னணி இசை பக்க பலமாகி விடுகிறது. எழுதி இயக்கியிருக்கும் கிரிஷ் திருக்குமரன், ஆசையே அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் பொன்மொழியை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு, அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக கொடுத்திருக்கிறார். முதல் பாதி முழுக்க திருப்பங்களுடன் கூடிய வேகம் பிளஸ். இரண்டாம் பாதியை ஆக்ஷன் காட்சிகள் எடுத்துக்கொண்டு படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு போய் விடுகிறது.
மொத்தத்தில், ‘ரெட்ட தல’ அடி தடி  ஆக்‌ஷன் மேளா.

Related posts

Leave a Comment