ஒரு ஆக்சன் திரில்லரில் ஹாரரைச் சேர்த்து படமாக்கியுள்ளார் இயக்குநர் மாருதி. படத்தின் கதைப்படி ஹீரோ பிரபாஸின் தாத்தாவான சஞ்சய் தத் காணாமல் போகிறார். அதனால் அவரின் பாட்டி மிகுந்த சோர்விலிருக்கிறார். பெரும் சமஸ்தானத்தின் வாரிசாக வாழ்ந்த தனது பாட்டியின் சோகத்தைப் போக்க பிரபாஸ் தாத்தாவைத் தேடிச் செல்கிறார். செல்லும் இடத்தில் நிதி அகர்வாலைச் சந்திக்கிறார்..அவர் மேல் காதல் கொள்கிறார். அடுத்த ட்விஸ்டாக தாத்தா சஞ்சய் தத் நல்லவர் இல்லை என்றும் அவர் பேயாக இருந்து தொல்லைகள் கொடுப்பதாகவும் அறிகிறார் பிரபாஸ். அதன்பின் தாத்தா பேரன் சண்டை துவங்குகிறது. தாத்தாவான சஞ்சய் தத் என்னென்ன பிரச்சனைகள் செய்தார் என்பதும், அதை பிரபாஸ் எப்படிச் சமாளித்தார் என்பதுமே படத்தின் கதை
ஆஜானுபாகுவான தோற்றத்தோடு வழக்கம் போல் வசீகரிக்கிறார் பிரபாஸ். சண்டைக்காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். மூன்று ஹீரோயின்களோடு ஆடும் நடனத்திலும் கவனம் ஈர்க்கிறார். நிதி அகர்வால் சர்ச்சில் நன் ஆகும் முயற்சியில் இருப்பவராக வருகிறார். பிரபாஸ் மீது காதல் வந்தபின் அவரும் கிளாமர் ரூட் எடுக்கிறார். மற்றொரு ஹீரோயினியாக வருகிறார் மாளவிகா மோகனன். அவரும் தன் பங்கிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார். ரிதுகுமாரும் அதே வரிசையில் இடம் பிடிக்கிறார். சஞ்சய் தத் மிரட்டலான நடிப்பால் நம்மை பயமுறுத்துகிறார். சமுத்திரக்கனி ஆங்காங்கே சில காட்சிகளில் வந்து கவனம் ஈர்க்கிறார். பிரபாஸின் பாட்டியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். பேய்க் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. விஷுவலில் நல்ல உழைப்பைக் கொட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசையால் மிரட்டியுள்ளார் தமன். பாடல்களும் குத்தாட்டம் போடும்படி தான் உள்ளது
ஒரு சாதாரண கதையாக ஆரம்பித்தாலும், போகப்போக படம் ஒரு ஹாரர் வகைக்குள் சென்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. நல்ல பரபர திரைக்கதை படத்தின் இறுதிவரை நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது. படத்தின் நீளத்தில் மட்டும் படக்குழு கொஞ்சம் கவனம் வைத்திருக்கலாம். மற்றபடி ராஜாசாப் நல்ல பொழுதுபோக்கு படம்
