அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா, சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், மூத்த நடிகை திருமதி லதா சேதுபதி அவர்கள் தலைமையில், வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையை முன்னெடுத்து வரும் அக்ஷயா டிரஸ்ட், சென்னையில் செயல்பட்டு வரும் 6 இலவச முதியோர் இல்லங்கள் மற்றும் காஞ்சிபுரம் – ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு இலவச முதியோர் இல்லம் மூலம், 400 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அடைக்கலம் மற்றும் அத்தியாவசிய ஆதரவுகளை வழங்கி வருகிறது.
மேலும், அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் முற்றிலும் இலவசமான ஆங்கில வழி பள்ளிக்கூடம் மூலம், பொருளாதார வசதியற்ற சுமார் 250 மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக, ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை அமைப்பை அக்ஷயா டிரஸ்ட் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
25 ஆண்டு காலமாக அக்ஷயா டிரஸ்ட்டிற்கு தொடர்ந்து பேராதரவும் உதவியும் அளித்து வரும் நன்கொடையாளர்களுக்கு விழாவில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
விழாவில், ஆடல், பாடல், கிளி ஜோசியம், மருதாணி இடுதல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்வித்தன.
இந்த நிகழ்வில், அக்ஷயா டிரஸ்ட் நிறுவனர் திரு ஜி. கோபாலன், திருமதி லலிதா கோபாலன், செயல்திட்ட இயக்குநர் நடிகர் வி. தாசரதி மற்றும் அக்ஷயா டிரஸ்ட் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

