மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம் கிஷோர் நடிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான பல மகிழ்வான தருணங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை திரவ் எழுதி இயக்கியுள்ளார்.
பட அனுபவம் பற்றி இயக்குநர் திரவ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பொறுப்பு, சுமைகள், கட்டுப்பாடுகள் காரணமாக இவற்றை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. இசையை உயிராக நேசித்த ஒருவன் குடும்ப பொறுப்பு காரணமாக தனது கனவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறான். ஒருகாலத்தில் நம்பிக்கையுடன் ஒலித்த அவனது குரல், ஆண்டுகள் கடந்த பின்னர் சமரசங்கள், பயம் மற்றும் நிறைவேறாத ஆசைகளின் கீழ் ஒடுங்கி போகிறது. ஆனால், தோல்வியடைந்த சோர்ந்து போன தனது தந்தையை பார்க்க விரும்பாத அவனது எட்டு வயது மகள், உலகம் கொண்டாடும் ஒரு ஹீரோவாக அவனது வாழ்வை மாற்றுகிறாள். தந்தையும் மகளும் இணைந்து உணர்வுப்பூர்வமாக தொடங்கும் இந்த கதை முடியும்போது ரசிகர்களுக்குள் நம்பிக்கையை விதைக்கும்” என்றார்.

படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் எழுதிய கதாபாத்திரத்தை தனது நடிப்பு திறமையால் திரையில் மேலும் மெருகேற்றி இருக்கிறார் நடிகர் கிஷோர். பெரும்பாலும் அவரை கடினமான, வலுவான கதாபாத்திரங்களில்தான் பார்த்திருக்கிறோம். அதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கிஷோராக அவரின் மிருதுவான, அமைதியான பக்கம் இந்த படத்தில் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். சுபத்ரா, ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி, ரவி எழுமழை உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். மனதை கவரும் பாடல்களையும் பின்னணி இசையையும் சங்கர் ரங்கராஜன் கொடுத்துள்ளார். படம் சிறப்பாக வெளிவர காரணமாக இருந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.
உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘மெல்லிசை’ திரைப்படம் ஜனவரி 30, 2026 அன்று வெளியாகிறது.
