கதை…
மத்திய அமைச்சர் ஆஷா சரத்.. இவரது இரண்டு சிறுநீரகங்களும் சரியாக இயங்காத காரணத்தினால் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்.. ஆனால் இவரது ரத்த வகை குரூப் அரிதானது என்பதால் நாடு முழுவதும் தேடி அலைகின்றனர்.. அப்போது இவரது ரத்த வகையைச் சேர்ந்த சசிகுமாரை கண்டறிகின்றனர்.
எனவே அமைச்சரின் உதவியாளர்கள் சசிகுமாரை வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ள நினைக்கின்றனர்.. அப்போது சசிகுமார் விதிக்கும் நிபந்தனை தான் படத்தின் ஹைலைட்ஸ்..
தன்னை நாடி வந்த அமைச்சருக்கு சசிகுமார் போடும் கட்டளை என்ன.? அவரது நிபந்தனை சுயநலமா.? பொதுநலமா.? அதை அமைச்சர் நிறைவேற்றி கொடுத்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
சமீபகாலமாக நடிகர் சசிகுமாரின் கதை தேர்வு நம்மை வியக்க வைக்கிறது.. அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என ஹாட்ரிக் வெற்றி அளித்த இவர் தற்போது இந்த MY LORD படத்தின் மூலம் தொடர் வெற்றியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்..
தன்னைத் தேடி வந்த அதிகார வர்க்கத்தை சசிகுமார் அடிப்பணிய வைக்கும் காட்சிகள் ரசிக்கத் தக்கவை.. சாந்தமான சாமானியன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை கேரக்டர் மூலம் நிரூபித்து இருக்கிறார் சசிகுமார்..
கதை நாயகியாக சைத்ரா ஆச்சார்.. சாமானிய பெண்ணாக வந்து சாமர்த்தியசாலியாக நடிப்பில் மிரட்டல்.. ..
மலையாள சினிமாவில் முக்கியமாக திரிஷ்யம் படத்தில் மிரட்டிய ஆசா சரத் இதில் அமைச்சர் கேரக்டருக்கு அக்மார்க் பொருத்தம்..
நேர்மையான பத்திரிக்கையாளராக குரு சோமசுந்தரம்.. கேரக்டருக்கு தன்னை அழகாக பொருத்திப் பார்த்திருக்கிறார்..
நீதிபதியாக ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக இயக்குநர் கோபி நயினார், வட்டி தொழில் செய்பவராக வசுமித்ரா உள்ளிட்டோர் தங்கள் கேரக்டர்களில் மின்னுகின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அதிகார வர்க்கத்தினரையும் உள்ளதை உள்ளேபடியே காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா..
சமூகத்தின் வலியை தன் இசை மூலம் கடத்த முடியும் என்பதை ஷான் ரோல்டன் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.. சிறப்பான பின்னணி இசையில் ஈர்த்து விடுகிறார்..
ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ என எளிய மனிதர்களை உணர்வுப்பூர்வமாக காட்டிய ராஜுமுருகன் தான் இயக்குனர்.. தன்னுடைய பாதையில் எந்த கமர்சியலை கலக்காமல் சமூக கருத்தை வலியுறுத்தி இந்த படத்தை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்..
என்னதான் எளியவர்கள் உயிரைக் காக்கும் உதவி செய்தாலும் அதிகார வர்க்கத்தினரின் அடவாடித்தனங்களை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன்..
