அறிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி. கே. எம். தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்பொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 26.4.26 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் இனி வரும் காலங்களில் வருவாய் பகிர்வு ( Revenue Sharing) முறையில் நடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில், தயாரிப்பாளர்கள் நடிகர்களால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு திரைப்படம் தோல்வி அடையும்போது, அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் உடனடியாக தயாரிப்பாளருக்கு அடுத்த திரைப்படம் நடித்து கொடுக்க உறுதி அளிக்கிறார். அதே போல அந்த படத்தின் இயக்குநர் தயாரிப்பாளரை அணுகி அடுத்த படம் இயக்கி தர உறுதி அளிக்கிறார். தயாரிப்பாளரின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் திரைப்படம் தயாரிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய தயாரிப்பாளர்கள் கூட இனி திரைப்படம் தயாரிப்பாளர்களா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று கடந்த 3 ஆண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நேரிலும், கடிதம் மூலமாகவும், பத்திரிகை வாயிலாகவும் பலமுறை தெரிவித்துள்ளோம். அவர்கள் இதுநாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். மேலும், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சம்பந்தபட்ட பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வருகின்றனர்.
ஆகவே, இந்த விஷயம் திரைத்துறையில் உள்ள அனைவரின் கவனத்துக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் 2.5.2026 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
மேற்படி தீர்மானமானது தயாரிப்பாளருக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது தெரிந்திருந்தும், பிற்காலத்தில் வரப்போகும் மிகப்பெரிய பாதிப்புகளை முன்னரே தடுத்து நிறுத்தும் நோக்கில் அனைத்து தயாரிப்பாளர்களின் ஒப்புதலோடு இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி மற்றும், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
எஸ். கதிரேசன்
ஆர்.ராதாகிருஷ்ணன்
செயலாளர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

