மோடி எம்.ஏ. படித்துள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி எம்.ஏ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இளங்கலைப் படிப்பை 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும், முதுகலை படிப்பை 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளவர் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடைசூழ வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 26) தனது வேட்புமனுவை சமர்பித்தார். இந்த நிலையில் மோடி வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் ரூ.2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.41 கோடியாகவும், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.1.1 கோடியாகவும் இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளைப் பொறுத்தவரை 2014ஆம் நிதியாண்டியில் மோடியின் வருடாந்திர வருமானம் ரூ.9.69 லட்சமாகவும், 2015ஆம் நிதியாண்டில் ரூ. 8.58 லட்சமாகவும், 2016 இல் ரூ. 19.23 லட்சமாகவும், 2017ஆம் ஆண்டில் 14.59 லட்சமாகவும் இருந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் நிதியாண்டில் ரூ.19.92 லட்சம் வருட வருமானமாக இருந்துள்ளது. அரசிடமிருந்து வரும் சம்பளப் பணமும், வங்கிகளிலிருந்து வரும் வட்டியும் மோடியின் வருமானத்துக்கு மூல ஆதாரமாக உள்ளது. 

அசையும் சொத்துக்களைப் பொறுத்தவரை மோடியின் கையிருப்பில் ரூ. 38,750 உள்ளது. வங்கிக் கணக்கில் வெறும் 4,143 ரூபாய் இருப்பதாகவும், நிரந்தர வைப்புத் தொகையாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.1.27 கோடி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பத்திரமும், ரூ.7.61 லட்சம் மதிப்புள்ள சேமிப்புப் பத்திரங்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆயுள் காப்பீடு திட்டங்களில் ரூ.1.90 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.

நகைகளைப் பொறுத்தவரை மோடிக்கு சொந்தமாக 45 கிராம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1.13 லட்சம். வருமான வரித் துறையிடமிருந்து டிடிஎஸ் பணம் ரூ. 85,145 வரவேண்டியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகத்தில் 1.40 லட்சம் ரூபாய் வர வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்குச் சொந்தமாக நிலமோ, கட்டிடங்களோ அல்லது வாகனங்களோ இல்லை என்று வேட்புமனுவில் தெளிவுபடுத்தியுள்ள மோடி, ஒரே ஒரு அசையா சொத்தாக குஜராத்தின் காந்தி நகரில் 25 சதவிகித பங்குடன் வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 1.10 கோடியாகும்.

அதேபோல மோடியின் கல்வித் தகுதி எம்.ஏ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளங்கலைப் படிப்பை 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும், முதுகலை படிப்பை 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment