மறுபடியும் முத்தையாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு சாதிப்படம் தான் தேவராட்டம். முதலில் இவரிடம் இருந்து மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை மீட்டெடுக்க வேண்டும். வெட்டுவது, குத்துவது, குடிப்பது தவிர அங்குள்ளவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? ஏன் எல்லாப்படங்களிலும் இப்படியே சித்தரிக்க வேண்டும்.
நிறைய விமர்சனங்களைப் பார்த்தால் இப்படத்தில் சாதி நெடி இல்லை என்று சொல்லி இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் படம் நெடுக சாதிய உள்குத்து இருக்கிறது. உதாரணத்திற்கு படத்தில் கெளதம் கார்த்தி அக்கா மகளின் தோழி ஒருவர் பாலியல் வன் புணர்வு செய்யப்படுவார். அந்தப்பெண்ணின் தாய் தகப்பன் போலீஸ் வரை சென்று நீதி கிடைக்காததால் கெளதம் கார்த்தியிடம் வந்து உதவி கேட்பார்கள். அவர்கள் கெளதம் கார்த்திக்கை அய்யா அய்யா என்றே அழைப்பார்கள். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் பையனும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது போன்ற குறியீடுகளை அந்தப்பையனின் அப்பா கேரக்டரை வைத்து உணர முடியும்.
எங்கள் சாதிக்குள் மட்டும் தான் படம் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒருசிலரை மட்டும் கெட்டவர்கள் போல் காட்டிவிட்டு மற்றபடி ஹீரோ உள்ளிட்ட மொத்த கேரக்டர்களும் மாபெரும் வீரர்களாகவும் இந்த உலகிலே அவர்கள் தான் நல்லவர்கள் என்பது போலவும் காட்டி இருப்பது சாதிப்பெருமை இல்லாமல் வேறு என்ன? அதாவது எங்கள் சாதியில் கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதேநேரம் நாங்கள் சொந்த சாதியில் இருக்கும் கெட்டவர்களை கூட அழிக்கும் வீரமும் குணமும் கொண்டவர்களாக இருக்கிறோம்” என்பதெல்லாம் எவ்வளவு பெரிய வன்ம விதை.
மற்றபடி படம் முன்பாதி முழுதும் சிறப்பாகவே எடுக்கப் பட்டிருக்கிறது. கெளதம் கார்த்திக் ஆக்ஷன் சீக்வென்ஸில் மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வெல்டன் கெளதம். மற்ற கேரக்டர்களில் வினோதினி தவிர வேறும் யாரும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளர் இசை அமைப்பாளர் இருவரும் நல்ல உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.
மீண்டும் இயக்குநர் முத்தையாவிடம் ஒரு கோரிக்கை. நீங்கள் எஸ்கேபிசத்தை மிக லாவகமாக கையாண்டு வருகிறீர்கள். அதாவது, “நான் பார்த்த, வாழ்ந்த கதையைத் தான் எடுக்க முடியும். எனக்கு அதுதான் தெரியும்” என்று சொல்லி தொடர்ந்து உங்கள் சாதிப் பாசத்தை காட்டி வருகிறீர்கள். தென் மாவட்டங்களில் வசூல் ரீதியாக அது ஓரளவு லாபத்தைத் தருவதால் தயாரிப்பாளர்களும் உங்களை அணுகி வருகிறார்கள். ஆனால் உங்களைப் போலவே பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் பார்த்த கதை வாழ்ந்த கதை என்று புறப்பட்டிருந்தால் சினிமாவின் நிலையும் சமூகத்தின் நிலையும் என்னவாகி இருக்கும்? அவர்களிடம் மனிதநேசமும் பரந்த வாசிப்பும் இருந்தது. உங்களிடம் வெறும் சாதி நேசம் மட்டும் தான் இருக்கிறது. பொருளாதார தன்னிறைவு அடையாதவரை ஒரு மனிதனை எந்தச் சாதியும் தூக்கி கொண்டாடுவதில்லை. அதற்கு உங்களை வைத்தே பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அது உங்களுக்கும் தெரியும். தயவுசெய்து படைப்பாளிகள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை உணருங்கள்.