“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
இசை அமைப்பாளர் கிறிஸ்டி பேசியதாவது,
“இந்தப்படம் எனக்கு கிடைக்கக் காரணமே இயக்குநர் ரஞ்சித் தான். சினிமா எப்ப வேணும்னாலும் உன்னை மாத்தும் என்று ரஞ்சித் சொன்னார். அப்படியொரு மாற்றம் ரஞ்சித் மூலமாகத்தான் நடந்தது. இந்தப்படத்தில் என்னை கமிட் செய்த தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. அதேபோல் இயக்குநர் ராஜா முரளிதரனுக்கும் பெரிய நன்றி” என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,
“பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன். இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும். இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்
கதைநாயகன் செல்லா பேசும்போது,
“இங்கு வந்து என்னைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. வசந்தபாலன் சாரின் வெயில் படம் பெரிதாக கவனிக்கப்பட்டதற்கு காரணம் பிரஸ். எனக்கும் மீடியா சப்போர்ட் பண்ணணும்னு கேட்டுக்கிறேன். இசை அமைப்பாளர் பற்றி நிறையச் சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் உழைத்துள்ளார். அவரின் பாடல்களை கேட்டதும் எனக்குள் ஒரு அதிர்வு கிடைத்தது. இந்தப்படம் வெற்றி பெற்றால் அதற்கான மொத்தப் பெருமையும் இசை அமைப்பாளருக்குத் தான். டேஞ்சர் மணியின் ரிஸ்க் எல்லாம் சண்டைக்காட்சிகளில் தெரியும்..கேமராமேன் மிகச்சிறந்த உழைப்பாளி. ரஞ்சித் அண்ணன் இந்தப் பங்ஷனுக்கு வந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. என் கற்பனையை நிஜமாக்கியது என் அப்பா தான். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இயக்குநரும் நானும் ஒன்று தான். நாங்கள் வேறு வேறு கிடையாது” என்றார்
இயக்குநர் ராஜா முரளிதரன் பேசியதாவது,
“எனக்கு இது முதல் மேடை. கூட்டத்தில் எனக்குப் பேச வராது. உருவம் சாதி அந்த மாதிரி அடையாளங்களோடு தான் என்னைப் பலரும் பார்த்தார்கள். என்னை யாருமே நம்பவில்லை. அந்த வகையில் என்னை நம்பிய துரைராஜ் அப்பாவிற்கு நன்றி. அவர் எனக்கு இன்னொரு அப்பா. நானும் ஸ்டெல்லாவும் பிரண்ட். கோவையில் வேலைப் பார்த்து சென்னைக்கு வருவேன். பரணி ஸ்டெல்லா என்ற என் இரு உயிர் நண்பர்கள் தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உடன் நின்ற அத்தனை பேருக்கும் நன்றி” என்றார்.