தாராளபிரபு- விமர்சனம்!

முதல் வரியிலே சொல்லிவிடலாம்..பக்கா எனர்ஜிடிக் படம் இது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை தேடும் இளைஞனான ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஸ்போம் (உயிரணு) டோனராக மாறுகிறார். அவரை டாக்டரான விவேக் அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். இடையில் ஹீரோவுக்கு ஒரு காதல் வர, அந்தக் காதலி மனைவியாக அந்த மனைவிக்கு உண்மை தெரிய அடுத்து என்னானது என்பதே தாராளபிரபு..

முன்பாதி முழுதும் தாராளமாக காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக விவேக் அத்தனை காட்சிகளையும் அல்டிமேட் காட்சிகளாக்கி இருக்கிறார். பின்பாதி படத்தை அப்படியே செண்டி மெண்ட் ஏரியாவிற்குள் கொண்டு நிறுத்தி நறுக்கென்று முடித்துள்ளார் இயக்குநர். படத்தின் வசனங்கள் எல்லாம் 2K கிட்ஸ் மட்டும் அல்லாமல் எல்லாராலும் கொண்டாடப்படும்..

ஹரிஷ் கல்யாணுக்கு இப்படம் ஒரு கமர்சியல் ஹிட் படமாக அமைய வாய்ப்பு நிறையவே உள்ளது. அவரும் ஒரு கமர்சியல் ஹீரோவிற்கான தரத்தோடு தயாராகி இருக்கிறார். நாயகியின் நடிப்பும் அவரது அழகு போலவே படத்தில் கவர்கிறது. படத்தின் ஆகப்பெரிய தூண் விவேக் தான். படம் மொத்தத்தையும் அவரது காமெடியும் குணச்சித்திர நடிப்பும் தான் காப்பாற்றியுள்ளது..

படத்தை பக்கா ரிச்சாக காட்டியுள்ளார் கேமராமேன். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே திருப்திகரம். தான் செய்தது நல்லது தான் என்ற தெளிவுள்ள ஹீரோ ஏன் இதை காதலியிடம் மறைக்க வேண்டும்? என்ற கேள்வி லைட்டாக எழுந்தாலும், நம் சமூகம் அந்தளவிற்கு இந்த உயிரணு தானம் என்பதை வெளிப்படையாக வரவேற்காது என்பதற்காக இயக்குநர் அந்த லாஜிக்கை வைத்திருக்கலாம் என்று தோன்றியது..மொத்தத்தில் தாராளபிரபுவை தாராளமாக கொண்டாடலாம்

Related posts

Leave a Comment