ஜப்பானில் இந்த (2021) ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தேர்வாகியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியின் வாள் சண்டை பிரிவில் பங்கேற்பதற்கு உலக தரவரிசையைக் கணக்கிட்டு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உலக தரவரிசையில் 45ஆவது இடத்தில் உள்ள 27 வயது பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
“ஆறாவது படிச்சுட்டு இருந்தப்போ கிளாஸை கட் அடிக்கிறதுக்காக விளையாட்டுப் போட்டிக்குப் பெயர்கொடுக்க நினைச்சேன். ‘மற்ற விளையாட்டுகளுக்கு ஆட்களை சேர்த்தாச்சு. வாள்சண்டை போட்டியில் கலந்துக்கறியா?’னு கேட்டாங்க. வேற வழியில்லாமல் பெயர் கொடுத்தேன். இப்போ, அதுவே எனக்கான அடையாளமா மாறியிருக்குது. பதினாலு வயசுல சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பிச்சுட்டேன். இந்தியாவில் அதிகம் ஃபேமஸாகாத இந்தப் போட்டி, இப்போ என் மூலம் ஓரளவுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கிறது சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பவானி தேவி.
2019ஆம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். தற்போது ஹங்கேரியில் நடந்துவரும் வாள் வீச்சு உலகக் கோப்பையில் ஹங்கேரி அணி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைய கொரிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் AOR என்ற Adjust official ranking எனப்படும் வழிமுறை மூலமாக பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அடுத்த மாதம் வெளியாகும் அதிகாரபூர்வ தரவரிசை மூலம் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானது முறையாக அறிவிக்கப்படும். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சு பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெறுகிறார். தற்போது பவானி ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட் நகரில் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.