ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக தயார் எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால்

சேலத்தில் நேற்று (மார்ச் 16) பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின்… மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தான் ஆஜராக தயார் என்று பேசினார்.

வீரபாண்டி, ஏற்காடு தொகுதி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த ஸ்டாலின்,

“அம்மையார் ஜெயலலிதாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்று பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். விசுவாசமாக இருப்பவர் என்ன செய்திருக்க வேண்டும்? அவருடைய மர்ம மரணத்தை கண்டுபிடித்து நாட்டுக்குச் சொல்லி இருக்க வேண்டும்.

இதுவரையில் யாருக்காவது ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்று தெரியுமா? உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே தெரியாது. பெரிய மர்மமாக இருக்கிறது. அதுவும் இறந்தது யார்? சாதாரண ஜெயலலிதாவோ, அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ அல்ல. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா! சிறிது நினைத்துப் பாருங்கள். நம்முடைய உறவினர்களோ, நண்பர்களோ அக்கம் பக்கத்தில் இறந்து விட்டால் என்ன செய்கிறோம்? அங்குச் சென்று அவர்களது உடலுக்கு மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, இறந்ததற்கான காரணத்தைக் கேட்கிறோம். அவர்களும் அவர் இறந்ததற்கான காரணத்தைக் கூறுவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா. அவருடைய மரணம் எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் அந்தப் பொறுப்பில் இருந்த போதுதான் இறந்து போனார். ஏன் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் மறைந்தார்.

அப்போதெல்லாம், பேரறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா அவர்களும், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த ஹெச்.வி.ஹண்டே அவர்களும்தான் அவ்வப்போது அவர்களது உடல்நிலை குறித்த விவரங்களை, காலையிலும், மாலையிலும் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்கள்.

அதுதான் மரபு. அதேபோல் ஜெயலலிதா அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் மறைந்தார். அவரது உடல்நிலை பற்றி முறையாக அவ்வப்போது அறிவித்தார்களா?

ஒவ்வொரு அமைச்சரும் வந்து அம்மா இட்லி சாப்பிட்டார், டிவி பார்த்தார், பத்திரிகை படித்தார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரு தலைவரின் மரணத்தைப் பற்றி கொச்சைப்படுத்திப் பேச விரும்பவில்லை. அவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை வளர்க்கவும் இல்லை. ஆனால் அந்த மரணம் குறித்த உண்மை இதுவரையில் வெளிவரவில்லை. என்ன காரணம்?” என்று கேட்ட ஸ்டாலின் தொடர்ந்து, “இதே ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை சசிகலா பறித்தவுடன் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். ‘அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீங்கள் கொடுத்த பதவி. நீங்கள் சிறைக்குச் செல்லும்போதெல்லாம் எனக்கு அந்தப் பதவியைக் கொடுத்து இருக்கிறீர்கள். அந்தப் பதவியைப் பறித்துவிட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மரணமே மர்மமாக இருக்கிறது. எனவே அந்த மர்மத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். விசாரணை கமிஷன் வைத்தாக வேண்டும்’ என்று ஆன்மாவோடு பேசி, அதற்கு பிறகு பத்திரிகை நிருபர்களிடம் பன்னீர்செல்வம் விளக்கம் சொல்லி அவையெல்லாம் செய்திகளாக வந்ததா இல்லையா?

அதற்குப் பிறகு ‘உங்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கிறோம் என்றும் நீங்கள் கேட்ட விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் சொல்லி சமாதானம் செய்தனர். ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஏதாவது நியாயம் கிடைத்திருக்கிறதா? இதுவரையில் இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் – யார் விசாரணை கமிஷன் அமைக்கச் சொன்னாரோ, அந்த ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பல முறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இதுவரையில் அவர் செல்லவில்லை.

இந்த லட்சணத்தில் பழனிசாமி அவர்கள் ஜெயலலிதா மரணத்திற்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நாம் ஆட்சிக்கு வந்ததும், அந்த விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை வெளிக்கொண்டு வரப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். அதைப் பார்த்தவுடன் அஞ்சி நடுங்கி திசை திருப்ப மக்களிடத்தில் மூடி மறைப்பதற்கு ஸ்டாலினும் கலைஞரும் தான் காரணம் என்று ஒரு புது கரடியை விட்டிருக்கிறார். ஒரு வாதத்திற்கு அது உண்மை என்றால், ஏன் நான்கு வருடங்களில் ஆறுமுகசாமி எங்களை அழைத்து விசாரிக்கவில்லை. இப்போதும் சொல்கிறேன். ஆறுமுகசாமி எங்களை அழைக்கட்டும். நேரடியாக நான் வந்து ஆஜராகி விளக்கம் சொல்லத் தயாராக இருக்கிறேன். காத்திருக்கிறேன். பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா? முதலமைச்சர் பொறுப்பு என்பது மிகப்பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பில் உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

Related posts

Leave a Comment