அனைத்து சட்டமன்ற கூட்டத்திலும் பங்கேற்றவன் நான் – எடப்பாடி பழனிச்சாமி

தமிழக வரலாற்றில் அனைத்து சட்டமன்றக் கூட்டத்திலும் பங்கேற்ற முதல்வர் நான் மட்டுமே என்று எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் எங்குச் சென்றாலும், என்னைப் பற்றியும் அமைச்சர்களைப் பற்றியும்தான் பேசி வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி யார் என்றே தெரியாது என்றார். தற்போது அவருக்கு என்னைப் பற்றி பேசவில்லை என்றால் தூக்கமே வராது.

இந்த ஆட்சியை எளிதாகக் கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார்.

ஆனால் அவரது கனவு பலிக்கவில்லை. உங்களுடைய ஆதரவுடன்அனைத்தையும் தவிடுபொடியாக்கினேன். ஒரு சாதாரண மனிதன் முதல்வரானால் எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தேன். ஆனால் மக்களின் ஆதரவால் அனைத்திலும் வெற்றி பெற்றேன்.

நான் முதல்வரான பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். அப்போது, சட்டமன்றத்தில் என்ன அட்டகாசம் செய்தார்கள். நீதிபதி இருக்கைக்குச் சமமான சபாநாயகர் இருக்கைக்குச் சென்று அவரை கீழே தள்ளிவிட்டு அமர்ந்தார்கள்.

பெரும்பான்மையை நிரூபித்தவுடன் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே செல்கிறார். இப்படிப்பட்ட ஒரு தலைவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா” என முதல்வர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஏதோ ஸ்டாலின்தான் எனக்கு முதலமைச்சர் பதவி கொடுத்ததை போல எங்குப் பார்த்தாலும் ஊர்ந்து போனாரா, பறந்து போனாரா என்று பேசிவருகிறார்.

மக்கள் ஆதரித்து, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை ஆதரித்து அதனால் முதல்வர் ஆனேன். ஆனால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பணியையாவது ஒழுங்காகச் செய்தீர்களா… நான் முதல்வர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள்கூட சட்டமன்றத்திற்குச் செல்லாமல் விடுமுறை எடுத்தது இல்லை. சட்டமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து நாட்களும் பங்கேற்ற முதலமைச்சர் நான் மட்டுமே” என்று பெருமிதம் தெரிவித்த முதல்வர் மதுரை மாவட்டத்தில் அதிமுக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகக் கூறி வாக்கு சேகரித்தார்.

Related posts

Leave a Comment