தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பத்து நாட்கள் மட்டுமே உள்ளதுஅதற்குள் எத்தனை கண்ணிகளைக் கடந்து செல்ல வேண்டுமோ என்று எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அச்சத்தோடு அலைகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து வரும் ‘சர்வே’ ரிசல்ட்களைப் பார்த்துவிட்டு, இப்போதே ஜெயித்துவிட்டதைப் போல ‘மிதப்பில்’ இருக்கிறார்கள் திமுக வேட்பாளர்கள் பலர். அதிமுக தலைமையிடமிருந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஸ்வீட் பாக்ஸ் போனதென்றால், அறிவாலயத்தில் இருந்து வேட்பாளர்களுக்கு இந்த மிதப்பும், அசால்ட்டும்தான் பகிரப்பட்டிருக்கின்றன. இது 2016 தேர்தல் வரலாற்றையே திரும்பவும் எழுதி விடுமோ என்று உதறலில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகளும், வியூகங்களும் எப்படிப் போகின்றன என்பதைக் கண்டறிவதற்காக, கடந்த சில நாட்களாக பல்வேறு தொகுதிகளிலும் வலம் வந்து எல்லாக் கட்சியினரையும் சந்தித்துப் பேசினோம். அடுத்தடுத்து வரும் தேர்தல் கணிப்புகள், திமுகவுக்குச் சாதகமாக இருந்தாலும், அதிமுகவினர் இன்னும் உற்சாகமாக வேலை பார்ப்பதையும், திமுகவினர் பெரும்பாலும் பேரச்சத்திலும், ஒருவிதமான பதற்றத்திலும் பணி செய்வதைப் பார்க்க முடிந்தது. நாம் சந்தித்துப் பேசிய நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆழ்மனக்குமுறலின் ஒருமித்த தொகுப்புதான் இந்தப் பதிவு…
‘‘தலைமை என்ன நம்பிக்கையில் இருக்கிறது, அவர்களுக்குக் கிடைத்த தகவல் என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், இங்கேயிருக்கின்ற மக்களின் தேவை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதெல்லாம் களத்தில் இருக்கிற எங்களுக்குத்தான் தெரியும். 2016 தேர்தலின்போது, இதேபோலத்தான் திமுக ஜெயிக்குமென்று பல்வேறு பத்திரிகைகளிலும் கணிப்பு வெளியிட்டார்கள். இப்போது பாரதிய ஜனதாவை பகிரங்கமாகவும், அதிமுகவை அதிதீவிரமாகவும் ஆதரிக்கும் மிக முக்கியமான பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடகங்களிலும் கூட திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றுதான் கணிப்பை வெளியிட்டார்கள். அப்போது அவர்கள் குறிப்பிட்டிருந்த தகவல்கள் பெரும்பாலும் சரியான கணிப்பாகத்தான் இருந்தது. முப்பதுக்கும் குறைவான தொகுதிகளில், குறிப்பாக தனி தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்குமான ஆதரவு வித்தியாசம் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது.
அப்படிப்பட்ட தொகுதிகளைக் குறிவைத்து களமிறங்கிய அதிமுக தலைமை, அந்தத் தொகுதிகளில் எல்லாம் ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் என அள்ளிக்கொடுத்தார்கள். நினைத்ததுபோலவே, திமுகவுக்குச் சாதகமாக இருந்த அந்தத் தொகுதிகளில் ஜெயித்தார்கள். அலட்டிக்கொள்ளாமல் ஆட்சி அமைத்தார்கள். இப்போது வரும் கணிப்புகளில் எல்லாம் திமுகவுக்கும், அதிமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்குமென்றும், ஜெயிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய இடைவெளி இருக்குமென்றும் சொல்கிறார்கள். இந்தக் கணிப்புகள், உண்மையைத்தான் சொல்கின்றனவா அல்லது திமுகவை ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கவிட்டு களத்தில் காசை அடித்து ஜெயிப்பதற்கு அதிமுகவுக்கு உதவுகின்றனவா என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனென்றால், கணிப்புகள் சொல்வதைப் போலின்றி, பல தொகுதிகளில் போட்டி மிக மிகக் கடுமையாகத்தான் இருக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் செலவு செய்வதைப் பார்த்தால், பல தொகுதிகளை அசால்ட் ஆக அடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் தெரிகிறது.
அதிமுக தலைமையிடமிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஸ்வீட் பாக்ஸ் கொடுத்ததாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்கு மேல் ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய கெப்பாசிட்டியைப் பொறுத்து, வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுக்கு 500 சாக்லேட் என்று அவர்கள் கவர் போட்டே வைத்து விட்டார்கள். இந்த வார இறுதியில் விநியோகித்து விடுவார்கள். எங்கள் கட்சியில் ஓட்டுக்கு 300 சாக்லேட் என்று தலைமை முடிவு செய்திருப்பதாக வேட்பாளர்கள் சொல்கிறார்கள். அப்படியெனில் அதை மட்டுமாவது தலைமை நேரடியாகக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், சர்வே முடிவுகள் திமுகவுக்குச் சாதகமாக வர தொடங்கியதும், எதற்குப் பணம் தர வேண்டுமென்று நினைத்து அதிலும் பாதியைக் குறைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். தொகுதிக்கு மூன்று ஸ்வீட் பாக்ஸ் மட்டுமே தலைமை கொடுத்திருப்பதாக வேட்பாளர்கள் புலம்புகிறார்கள். அதிலும் முன்னாள் அமைச்சர்கள், வசதி படைத்தவர்கள் என்று பட்டியலிட்டு 60 பேருக்கு அதுவும் தரவில்லை என்கிறார்கள்.
அதிமுகவைப் போலவே 2 லட்சம் பேருக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், தலைமை கொடுத்ததை வைத்து, ஓட்டுக்கு 150 மட்டும்தான் தரமுடியும். அதற்கு மேல் பாக்கியை அந்தந்த வேட்பாளர்கள் போட்டுக் கொடுக்க வேண்டுமென்று தலைமை உத்தரவிட்டு இருப்பதாகத் தெரிகிறது. நேர்காணலின்போது, ‘தேர்தலில் எவ்வளவு செலவழிப்பீர்கள்’ என்ற கேள்வி மட்டும்தான் எல்லோரிடமும் கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது சீட் வாங்க வேண்டுமென்பதற்காக, ‘10 கோடி செலவழிப்பேன்; 15 கோடி செலவழிப்பேன்’ என்று சொன்ன பலரும், இப்போது ‘சர்வே’ முடிவுகள் திமுகவுக்குச் சாதகமாக வர தொடங்கியதும், காசை வெளியே எடுக்காமலே ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். சில வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளைக் கண்டுகொள்வதேயில்லை. பல நேரங்களில் பார்த்தும் பார்க்காதது போல கடந்து போகிறார்கள்.
இவர்களெல்லாம் 2 லட்சம் பேருக்கு ஓட்டுக்கு 300 தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குத் துளியும் கிடையாது. ஒருவேளை திமுக சார்பில் வெறும் 150 அல்லது 200 மட்டுமே கொடுக்கும்பட்சத்தில், ஆளும்கட்சி சார்பில் ஐந்நூறோ, ஆயிரமோ, ரெண்டாயிரமோ கொடுத்தால் திமுக ஜெயிக்க வேண்டிய தொகுதி என்று கணிக்கப்பட்டிருந்தாலும் அதில் தோற்றுப்போகவே வாய்ப்பு அதிகம். அதேபோல, தனித் தொகுதிகளைத் தலைமை இன்னும் அதிகமாகக் கவனிக்க வேண்டும். அங்குள்ள மக்களில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள், ஓட்டுக்கு ஏதாவது வருமென்று எதிர்பார்ப்பவர்கள். அத்தகைய தொகுதிகளில், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக பணத்தை இறக்கிட ஆளும்கட்சி நினைத்திருக்கிறது.
ஆனால் திமுக தரப்பில், அங்கு போட்டியிடுபவர்களுக்கும் மூன்று ஸ்வீட் பாக்ஸ்தான் தரப்படுவதாகத் தெரிய வந்திருக்கிறது. இது இன்னும் ஆபத்தான விஷயமாகத் தெரிகிறது. இப்போது அதிமுக 50 தொகுதிகளில் ஜெயிக்குமென்று கணிக்கப்பட்டிருக்கிறது. திமுக பணம் தராத 60 தொகுதிகளில் 30லிருந்து 40 தொகுதிகளில் அதிமுக காசை இறக்கினால் அங்கு நிலைமை மாறிவிடும். அதேபோல தமிழகத்தில் உள்ள 48 தனித் தொகுதிகளில் 30இல் இருந்து 40 தொகுதிகளை அதிமுக கைப்பற்றிவிட்டால் மறுபடியும் திமுக எதிர்க்கட்சியாகத்தான் உட்கார முடியும். இதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது’’ என்று தங்களுடைய அச்சத்தையும் கள நிலவரத்தையும் விரிவாக விளக்கினார்கள்.
வேட்பாளர்கள் சிலரிடம் இதுபற்றி விசாரித்தால் அவர்களின் புலம்பல் அதை விட அதிகமாகியிருக்கிறது…
‘‘பத்தாண்டுகளாகக் கட்சியை நடத்துவதற்கு எத்தனையோ செலவழித்திருக்கிறோம். எங்களுடைய தொழிலில் கிடைக்கிற பணம் அல்லது குடும்பச் சொத்தில் எதையாவது விற்றுத்தான் கட்சிக்குச் செலவழித்து, பதவியையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். நேர்காணலின்போது சீட் வாங்குவதற்காக செலவழிக்கிறோம் என்று சொல்லிவிட்டாலும் எங்களில் பலருடைய நிலைமை சரியாக இல்லை. நண்பர்கள் யாரையாவது கூப்பிட்டால் கூட, பணத்துக்காகத்தான் கூப்பிடுகிறோம் என்று யாரும் எடுப்பதே இல்லை. சர்வே முடிவுகள் சாதகமாக இருப்பதைக் காண்பித்தாலும் ‘இப்போதைக்கு காசில்லை’ என்றுதான் கை விரிக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், ஒரு வேட்பாளர் தன்னிடம் பணமில்லாமல், அவருடைய அண்ணன் கட்டிக் கொண்டிருந்த புதிய வீட்டை 50 லட்ச ரூபாய்க்கு அப்படியே கைமாற்றிவிட்டு, அந்தப் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார். கடைசி நேரத்தில் கட்சியும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கைகழுவினால் என்னதான் செய்வதென்று தெரியவில்லை’’ என்று குமுறினார்கள்.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க இந்த வேட்பாளர்களின் புலம்பலும், கட்சி நிர்வாகிகளின் கவலையும் அதிகமாகிக்கொண்டிருக்கும் நிலையில், கீழ்த்தட்டு மக்களின் எதிர்பார்ப்புகளும் எகிறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளைவிட, கல்வியிலும், தொழிலிலும், பொருளாதாரத்திலும் முன்னிலை வகிக்கும் கொங்கு மண்டலத்திலுள்ள தொகுதிகளில்தான் தேர்தலுக்கு அதிகளவிலான பணப்புழக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆச்சரியமளிக்கும் விதமாக அங்குள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்தான், ஓட்டுக்கு எவ்வளவு தேறுமென்று அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதையும் பார்க்க முடிந்தது.
கோவையிலுள்ள பத்திரிகையாளர் நண்பர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘கொங்கு மண்டலத்தில் இந்த கலாச்சாரம் அதிகரித்திருப்பது, கடந்த பத்தாண்டுகளில்தான். இதை இங்கே துவக்கி வைத்ததும் திமுகதான். ஆனால், ஒரு விஷயத்தை இங்கே கவனிக்க வேண்டும். இங்கே எவ்வளவு செலவழித்தாலும், ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், மக்கள் எடுக்கும் முடிவுகளை மாற்ற முடியாது என்பதும் தெளிவாகியிருக்கிறது. கடந்த 2011 தேர்தலில் அதிமுகவினரை விட திமுக சார்பில்தான் அதிகமாக பணம் தரப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் திமுக தோற்றது. கடந்த 2016 தேர்தலில் அதிமுகதான் அதிகப் பணம் கொடுத்தது. அந்தத் தேர்தலில் மட்டும்தான் பணம் வெற்றியின் திசையை மாற்றுவதாக இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக பணத்தை அள்ளி வீசியது. ஆனால் இங்குள்ள ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை. காசே தர முடியாத, தர விருப்பமில்லாத கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கோவையில் வென்றார். அதனால் இந்தத் தேர்தலில் யார், எவ்வளவு காசு கொடுத்தாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமென்று திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், பணம் என்பது தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அளவு சதவிகிதத்துக்கு வேலை பார்க்கும் என்பதையும் மறுக்க முடியாது’’ என்று தெளிவுபடுத்தினார்கள்.
இவர்கள் சொல்வதற்கும், திமுகவினர் அச்சப்படுவதற்கும் ஒரு நூலிழை வித்தியாசம்தான் இருப்பதை உணர முடிந்தது. பணத்தால் பெரும்பான்மை வாக்காளர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது உண்மைதான். அதேநேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும்போது, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படும் வாக்காளர்களால் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வெற்றி திசை மாறிவிடுமே என்பதுதான் உடன்பிறப்புகளின் உண்மையான கவலையாக இருக்கிறது. திமுக தலைமைக்கு இவர்களின் குமுறல்கள் எட்டுமா… அதன்படி திமுக தலைமை ஸ்டெப் எடுக்குமா என்பதில்தான் தேர்தலின் முடிவுகள் தீர்மானிக்கப்படும்.