சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதல்வர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடத்தில் எல்லாம் பொய்யாகப் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் எதாவது திட்டங்கள் செய்திருந்தால் தானே, அதைப் பெற்றி பேசுவார். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி போலி விவசாயி என்கிறார். நானும் மண்வெட்டி பிடிக்கிறேன், அவரும் மண்வெட்டி பிடிக்கட்டும். களத்தில் தெரியும் யார் விவசாயி என்று. எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். மக்கள் தான் இறுதித் தீர்ப்பு கொடுக்கப் போகிறார்கள்” என்று பேசினார்.
தொடர்ந்து அவர், “திமுகவை வீழ்த்த என் தொண்டை போனாலும், உயிரே போனாலும் பரவாயில்லை. உயிரை கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் என்னை பறறியே ஸ்டாலின் சிந்தித்து கொண்டிருக்கிறார். பெண்களுக்கு, மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசு அதிமுக அரசு. இந்த தேர்தலோடு திமுக எனும் குடும்ப கட்சிக்கு மூடு விழா நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
முதல்வர் பதவி என்பது மக்களிடம் பணிகளைச் செய்து முடிப்பது தான். சட்டசபையிலேயே திமுகவினர் அராஜகம் செய்தவர்கள். ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் போராட்டம் நடத்தப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். நடிகர் கருணாஸ் சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் இருப்பதாகச் சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கருணாஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த முதல்வருக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தேதி அறிவித்தது முதலே தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்குத் தொண்டையில் இன்ஃபக்ஷன் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய பிரச்சாரத்தில் மிகவும் சிரமத்துடன் பேசியதைக் காண முடிந்தது. ”பேசி பேசி தொண்டை மங்கிவிட்டது. பேசமுடியவில்லை. என்னால் முடிந்த அளவு பேசுகிறேன். புரிந்துகொள்ளுங்கள்… என கூறி முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.