அதிமுக வேட்பாளர் வாக்குறுதி நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதாகக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் அதிமுக வேட்பாளருக்கு எதிரான புகாரை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜெயராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் என்.பி.நட்ராஜ் போட்டியிடுகிறார். அவர், தனக்கு வாக்கு அளித்தால், தனது உறவினர்களுக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை வழங்குவதாகக் கூறி, வாக்குச் சேகரித்துவருகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று(மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு வந்தது. அப்போது, இதுகுறித்து மனுதாரர் ஜெயராஜ் எங்களிடம் புகார் அளிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவைப் பெற்று பரிசீலிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், இலவச மருத்துவச் சிகிச்சை அளிப்பதாக நட்ராஜ் பேசியதற்கான ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க மனுதாரர் ஜெயராஜுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அதே தொகுதியில் பலமுறை வென்ற கொறடா சக்ரபாணி திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

Related posts

Leave a Comment