கோவையில் நடனமாடி வாக்கு கேட்ட நமீதா

கோவையில் இளைஞர்களுடன் நடனமாடி, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஓட்டுக்கேட்டு நேற்று (மார்ச் 26) நடிகை நமிதா பிரச்சாரம் செய்தார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற புது புது யுத்திகளுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் வானதி சீனிவாசன். நேற்று அவருக்கு ஆதரவாக நடிகை நமிதா தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தாமரைக்கு வாக்கு சேகரித்தார். கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நமிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது , “கோவையில் பிறந்து வளர்ந்தவர் வேட்பாளர் வானதி சீனிவாசன். உங்களுக்காக சேவை செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் இந்த தொகுதியைச் சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் மோடியின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார். பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு கலாசாரமும், கடவுள் நம்பிக்கையும் உள்ள பூமி. அந்த நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி ஓட்டு போடுவது. எனவே இங்கேயே பிறந்து உங்களுக்காக சேவை புரியும் வானதி சீனிவாசனுக்கு உங்களின் வாக்கை செலுத்துங்கள். அப்பொழுதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்றார்.

மேலும், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து நடனமாடி அவரது பிரபல டிரேடு மார்க் வசனத்தில் “மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க. கோவையில் தாமரை மலரும்; தமிழ் நாடு வளரும்” என்று தெரிவித்தார்.

நமிதா பிரச்சாரத்தால் தொகுதியில் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் நடிகர் கமல்ஹாசன் புது புது ஐடியாக்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதால் பாஜக அதிமுகவினர் சோர்வடைந்தனர். நமிதா வருகையால் உற்சாகமடைந்தனர். அடுத்து கமலுக்கு எதிராக நடிகை கவுதமி குஷ்பு போன்றவர்களை தொகுதி பிரச்சாரத்திற்கு அழைத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Leave a Comment