முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மேற்கு வங்கத்தில் நேற்று (மார்ச் 27) வெளியான இரண்டு ஆடியோ துணுக்குகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
ஒன்று, மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியை உள்ளடக்கிய கிழக்கு மித்னாபூர் மாவட்ட பாஜக துணைத்தலைவருடன், ஒரு பெண் தொலைபேசியில் பேசுவதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு. மற்றொன்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாவிய ஒரு தலைவரும் இந்த மாதம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு.
முதல் ஒலிப்பதிவில் பேசும் குரல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவினுடையதுதான் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு.
அந்த பாஜக பிரமுகரின் பெயர், பிரலாய் பால். முன்னர் திரிணமூல் கட்சியில் செயல்பட்ட அவர், பிறகு சுவேந்து அதிகாரியுடன் சேர்ந்து பாஜகவில் சேர்ந்துவிட்டார். அவரிடம், ”மீண்டும் திரிணமூல் கட்சிக்கு வந்துவிடுங்கள்; நந்திகிராம் தொகுதியில் என்னுடைய வெற்றிக்காக சிறிது உதவிசெய்யுங்கள்.” என்று மம்தா கேட்கிறார் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு.
அதற்கு பதில் அளித்த பிரலாய், திரிணமூல் கட்சியிலிருந்தபோது பட்டியல் சாதி சான்றிதழைக்கூட தன்னால் வாங்கமுடியவில்லை என்றும் அங்கே பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் கூறுகிறார். மேலும், “மம்தா திதி..(அக்கா) நீங்களே என்னுடன் பேசியது எனக்கான அங்கீகாரமாக நினைக்கிறேன். ஆனால் சுவேந்து அதிகாரிக்கும் பாஜகவுக்கும் விசுவாசமாக இருக்கவே விரும்புகிறேன்.” என்று கூறுகிறார், பிரலாய்.
இதை பாஜகவின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து, மம்தா பாஜக நிர்வாகியிடம் இப்படி உதவி கேட்கிறாரே என ஏளனமாகப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் திரிணமூல் தரப்பில் இதற்கு ரொம்பவும் நிதானமாக, தன் கட்சியில் அதிருப்தியாக இருக்கும் ஒருவரிடம் ஒரு தலைவர் இப்படிப் பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம் என விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், இந்த ஒலிப்பதிவு உண்மையானதுதானா இல்லையா என்பது தெரியவில்லை என்றும் கூறினார், திரிணமூல் தலைவர்களில் ஒருவரான சுப்ரதா முகர்ஜி.
இரண்டாவது ஒலிப்பதிவானது, சுவேந்து அதிகாரியின் தந்தையும் அண்மையில் பாஜகவுக்குத் தாவிய திரிணமூல் எம்பியுமான சிசிர் அதிகாரியும், 2017-ல் பாஜகவுக்கு தாவிய முகுல் ராயும் பேசுவதாகக் கூறப்படுகிறது.
அதில், திரிணமூல் கட்சிக்குப் பாதகமாகவும் பாஜகவுக்குச் சாதகமாகவும் தேர்தல் ஆணைய உத்தரவையே மாற்றுவது குறித்து உரையாடல் இடம்பெற்றுள்ளது. வாக்குச்சாவடிகளில் உள்ளூர்க்காரர்கள் அல்லாத யாரையும் முகவர்களாக நியமிப்பது தொடர்பாகப் போகிறது, அந்த உரையாடல்.
சில இடங்களில் பாஜக தங்கவைத்திருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலரை திரிணமூல் கட்சியினர் பிடித்துக்கொடுத்த நிலையில், இந்த ஒலிப்பதிவும் சேர்ந்துகொள்ள, வங்கத் தேர்தலில் பாஜக வெளி மாநில குண்டர்களை வைத்து வன்முறையில் ஈடுபடுகிறது என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திரிணமூல் தரப்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே வெளியான இரண்டு ஒலிப்பதிவுகளால் அந்த மாநில அரசியலில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போனது.