தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் எந்த அளவுக்கு பாஜக மற்றும் அதிமுகவுக்குக் கிடைக்கும் என்பதை அறிவதற்காக மத்திய, மாநில உளவுத் துறைகளின் சார்பில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் இஸ்லாமியப் பெண்களில் கணிசமானவர்கள் பாஜகவை ஆதரிப்பதாகப் பதிவாகியிருக்கிறது என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றால் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து இப்போது தமிழகம், புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுகவும் பாமகவும் கூட்டுச்சேர்ந்துள்ள நிலையில், இஸ்லாமியர் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்குமா, எந்த அளவுக்குக் கிடைக்கும்? குறிப்பாக பாஜகவுக்கு வாக்களிப்பார்களா? என உளவுத்துறை சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் ராமகிருஷ்ணனும், பாஜக கூட்டணியில் அதிமுகவின் சையது சுல்தானும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தொகுதியில் உத்தமபாளையம், கூடலூர், கம்பம் ஆகிய பகுதிகளில் கணிசமான இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளன.
இங்குள்ள இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலை வெளிப்பட்டுள்ளது.
நடுக்கட்ட ஆண்களில் 0.05 சதவீதம் பேர் பாஜக கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.
திருமணமாகாத பெண்கள் மற்றும் தலாக் செய்யப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று கூறியிருப்பதாக அந்த சர்வேயில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தகவலின் உண்மைத் தன்மை எந்த அளவுக்கு முழுமையானது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனாலும் இஸ்லாமியர் ஆதரவு கட்சிகளும் இப்படியொரு தகவலை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்றே தோன்றுகிறது.