கமல்ஹாசனுக்காக வாக்கு சேகரிக்கும் சுஹாசினி

கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை கமல்ஹாசன், வானதி சீனிவாசன் இருவரிடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இருவரும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி மக்களை சந்திக்கின்றனர்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லத்தரசிகளுக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசமாக வழங்குவதாக அறிவித்தார். இவருக்கு ஆதரவாக நடிகை நமீதா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு நடிகை சுஹாசினி நேற்றும் இன்றும் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

கமல்ஹாசனை ஆதரித்து அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களை வீடு, வீடாக சென்று சந்தித்த அவர் தேர்தல் துண்டு பிரசுரங்களை வழங்கி டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 28) காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடிகை சுஹாசினி நடைபயிற்சி மேற்கொண்டார். அவர் நடந்து வருவதை பார்த்ததும் மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து அவரை சூழ்ந்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது அவர்களிடம் சுஹாசினி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு உங்கள் ஆதரவை தரவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு திரட்டினார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்ற சுஹாசினி அங்கு ஜூஸ் வாங்கி குடித்தார். சிறிது நேரம் அந்த கடையில் உள்ள ஊழியர்கள், அங்கு அமர்ந்திருந்த அனைவரிடமும் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள், அந்த பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அமர்ந்திருந்த முதியவர்கள் ஆகியோரிடமும் கமல்ஹாசனை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டார்.

இந்நிலையில், கோவை தெற்குத் தொகுதி என்னுடைய முக்கிய விலாசமாக மாறியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.

கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் மரக்கடை, தியாகி குமரன் வீதிகளில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவா் பேசியதாவது:

“மக்கள் நீதி மய்யத்தில் ஜாதி, மத பேதங்கள் கிடையாது. அதேபோல கோவையிலும் மத நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை. யாதும் ஊரே, யாவரும் கேளீா் என்று சொல்லும் தைரியமுள்ளவன் நான். இந்தியா முழுவதும் என்னுடைய ஊா்தான். இன்று கோவை தெற்கு தொகுதி என்னுடைய முக்கிய விலாசமாக மாறியுள்ளது.

உங்களுக்கு நியாயமாக சேவையாற்ற பல திட்டங்கள் மக்கள் நீதி மய்யத்திடம் உள்ளது. பெண்களுக்கான எங்கள் திட்டம் நாடு முழுவதும் காப்பி அடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் மாறி, மாறி காப்பி அடிக்கின்றன. நல்ல திட்டத்தை அவா்களும் அறிவித்து விட்டாா்களே என்று மக்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அறிவித்த எந்த திட்டத்தையும் அவா்கள் செய்தது கிடையாது. இதனை எல்லாம் செய்ய வேண்டும் என்றால் மக்கள் நீதி மய்யம்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா்.

Related posts

Leave a Comment