துரோகி தங்க தமிழ்செல்வன் எட்டப்பன் செந்தில்பாலாஜி

பிரச்சாரம் முடிவடையச் சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில் தமிழகத் தேர்தல் களத்தில் சூடு, ஆவி, புழுதி என பலதும் பறக்கிறது என்று சொல்லலாம். ஜெயலலிதா காலத்தில் பவ்யம் காட்டிவந்த எடப்பாடி பழனிசாமியும் இப்படிப் பேசுவாரா என திமுகவினரே வாயில் விரலை வைக்கும் அளவுக்கு, பிளந்துகட்டத் தொடங்கியிருக்கிறார்.

’ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியைப் பெற்றார்’ என திமுக தலைவர் முதல் அண்மையில் கட்சியில் சேர்ந்த இளம் பேச்சாளர்வரை பேசினாலும், ஒரு கட்டம்வரை அதற்குப் பதில் அளிக்காமல் சமாளித்தார், எடப்பாடி பழனிசாமி. ஓரளவுக்கு மேல் சமாளிக்க முடியாமல் போகவே அவரால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

விமர்சனத்தின் மீது பதிவாகும் கவனத்தைத் திருப்பிவிடும் உத்தியாக,’ஊர்ந்துபோய் பதவி வாங்கினதா சொல்றாங்க. ஊர்ந்துபோக நான் என்ன பாம்பா பல்லியா?’ என அப்பாவி பாமரனைப் போல எதிர்க் கேள்வியைப் போட்டார். திமுக தரப்பின் சாடலுக்கு அது பதிலாகவோ பதிலடியாகவோ இல்லாதபோதும், பழனிசாமி மீதான பரிதாபத்தை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை.

இந்தப் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக உளவுத் துறை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டது, எடப்பாடி தரப்பு. ஏற்கெனவே, எழுதி வைத்த துண்டுத்தாளை வைத்து ஸ்டாலின் படிக்கிறார் என திரும்பத்திரும்ப அவர் சொல்லிவந்ததும் ஏறத்தாழ இதேபாணிதான். அப்போது ஸ்டாலின் அதை பொருட்படுத்தாமல், ஊழலைப் பற்றி விவாதிக்கத் தயாரா என உடனுக்குடன் பதில் தந்துகொண்டே இருந்தார்.

அதற்கடுத்து இப்போது எடப்பாடி கையில் எடுத்திருக்கும் இன்னொரு பாணி, துரோகிகள் பட்டம்.

அதிமுகவில் அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பல முக்கிய தலைகள், பின்னர் திமுகவில் சேர்ந்து, இன்றைக்கு அங்கும் முக்கிய பிரமுகர்களாகவும் சிலர் இருக்கின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் செந்தில் பாலாஜியும் தங்க தமிழ்ச்செல்வனும்.

செந்தில் பாலாஜி, ஜெயலலிதாவின் கடந்த அமைச்சரவையில் 5 ஆண்டுகள் முழுவதும் அமைச்சர் பதவியில் அதுவும் போக்குவரத்துத் துறையிலிருந்தவர். இப்போது கரூர் தொகுதியில் போட்டியிடும் அவருக்கு எதிராக, சில நாள்களுக்கு முன்னர் அங்குப் பிரச்சாரம் செய்தார், பழனிசாமி. மற்ற விசயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென, ‘செந்தில் பாலாஜி, காட்டிக்கொடுத்த எட்டப்பன் வேலையைச் செய்தவர்’ என்று காட்டமாகத் தாக்கினார்.

அதைப்போலவே, தேனி மாவட்டத்தில் நேற்று பிரச்சாரம் செய்தபோது தங்க தமிழ்ச்செல்வனை வறுத்தெடுத்துவிட்டார், பழனிசாமி.

” துரோகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு டெபாசிட் கூடக் கிடைக்கக்கூடாது. அதுதான் அவருக்குச் சரியான தண்டனையாக இருக்கும். இங்குப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தைத் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும். திமுகவில் சேர்ந்த தங்கதமிழ்ச் செல்வனுக்குத் தகுந்த பாடம் புகட்டவேண்டும்.” என்று அதிகமாகவே ஆவேசம் காட்டினார், பழனிசாமி.

அது, தன்னை முதலமைச்சராக ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்துக்காகக் காட்டிக்கொள்ளப்பட்ட வெளிப்பாடா என்பது ஒரு பக்கம் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த இரண்டு அட்டாக் பேச்சுகளையும் கவனிக்கும்போது, ’ஆனாலும் இதெல்லாம் ஓவருங்க’ என்ற அவருடைய பிரபலமான வாசகம்தான், நினைவுக்கு வருகிறது!

Related posts

Leave a Comment