எ.வ.வேலுவுக்கு துரோகம் செய்த கட்சி நிர்வாகி

திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் 2 நாள்கள் ரெய்டு செய்தனர். ஆனால் அதில் எதிர்பார்த்துச் சென்ற எதையும் கைப்பற்ற முடியவில்லை என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வேலுவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மின்னம்பலத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக நமக்கு மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

திமுகவில் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த வி.பி. துரைசாமி தரப்பிலிருந்துதான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்புக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது; வட மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் செலவுக்கான பணம் முழுவதும் வேலு மூலமாகத்தான் விநியோகம் செய்யப்படுகிறது; அவரை நெருக்கிப்பிடித்தால் அந்த வழங்கல் பாதையை அடைத்துவிடலாம்; அது அவர்களுக்கு ஒரு நெருக்கடியைத் தரும் என்றும் யோசனையாகச் சொல்லப்பட்டுள்ளது.

அவர் ஏன் இப்படி வேலு மீது இந்த அளவுக்குப் பாதகம் பார்த்து வேலைசெய்ய வேண்டும் என்பது இயல்பாக எழக்கூடிய கேள்வி. பிரச்சினையும் அங்குதான் இருக்கிறது…

கடந்த முறை திமுக சார்பில் வெற்றிபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது, தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என முழுமையாக நம்பிக்கொண்டு இருந்தார், வி.பி. துரைசாமி. ஆனால் அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, பதவியும் ஏற்றுக்கொண்டார்.

அப்போது தன்னுடைய வாய்ப்பைப் பறித்ததில், ஸ்டாலினுக்கு அணுக்கமான வேலுவுக்கு பெரும் பங்கு இருக்கிறது என அழுத்தமாக நம்புகிறாராம், துரைசாமி.

அதையடுத்தே தன்னால் ஆன காரியத்தைச் செய்யும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள் இருவரையும் அறிந்த வட்டாரத்தில்.

அரசியலில் எல்லாம் அரசியலே!

Related posts

Leave a Comment

4 × four =