தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், ரூ.6 கோடி சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம், திமுக, அதிமுக என முக்கிய கட்சியினருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
அண்மையில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்நிலையில், அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினரின் கல்வி, நிதி நிறுவனங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.சி. சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்தியாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் 25 பேர் 6 வாகனத்தில் வந்து , பள்ளியின் மெயின் கேட்டை பூட்டி சோதனையை தொடங்கியிருக்கின்றனர். இந்த சோதனை இரவு வரை நடந்திருக்கிறது.
சென்னை தி.நகரில் டிஎன்சி நிதி நிறுவன அலுவலகங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கின்றனர். அதுபோன்று இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நீடித்துள்ளது. இதில் 6 கோடி ரூபாய் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. முன்னதாக கடலூரில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது