அனுஷ்கா மீண்டு வருவாரா

நாயகன் முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களைப் போலவே, கதாநாயகி முக்கியத்துவமுள்ள படங்கள் இப்பொழுது அதிகமாக வெளியாகிவருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே அப்படி வெளியாகும். ஆனால் இப்பொழுது அதிகமாக வெளியாக தொடங்கிவிட்டது. ஹீரோக்களுடன் டூயட் பாடவும், லூசு ஹீரோயினாகவும் தோன்றும் கதாபாத்திரங்கள் இல்லாமல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களை நம்ம ஹீரோயின்கள் தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நாயகிகளுக்கு முன்னுதாரணமாக, கதாநாயகி முக்கியத்துவமுள்ளப் படங்களை முதலில் தேர்ந்தெடுத்து, ஹிட்டும் கொடுத்தவர் அனுஷ்கா தான்.

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் பெரியளவில் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இப்படத்துக்குப் பிறகுதான், நடிகைகள் பலரும் ஹீரோயின் முக்கியத்துவம் கொண்டப் படங்களில் நடிக்கத் துவங்கினார்கள். அப்படியான பெருமைக்குரிய அனுஷ்காவுக்கு இப்போது பெரிதளவில் படவாய்ப்பே இல்லை என்பதே சோகமான செய்தி.

அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் இஞ்சி இடுப்பழகி. இந்தப் படத்துக்காக உடல் எடையை ஏற்றி இறக்கினார். அந்தப் படத்துக்காக பெரிதளவில் வெயிட் போட்டவருக்கு உடல் எடை குறைப்பதில் இன்னும் சிக்கல் நிலவி வருகிறதாம். எவ்வளவு தான் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தாலும் ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் மீண்டும் வெயிட் போட்டுவிடுகிறதாம். இதனால் மனதளவில் சோர்ந்துவிட்டார் அனுஷ்கா என்று சொல்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

தமிழ், தெலுங்கு திரையுலகிலிருந்து பல தயாரிப்பாளர்களும் அனுஷ்காவை படத்தில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். உடல் எடை பிரச்னையால் அவரே கதைகளைத் தவிர்த்துவருவதாகச் சொல்கிறார்கள்.இறுதியாக, இவர் நடிப்பில் கடந்த வருடம் மாதவனுடன் நடித்த நிசப்தம் படம் வெளியானது. இந்தப் படமும் வசூல் ரீதியில் பெரிதாக சாதிக்கவில்லை.

இப்படியான ஒரு சூழலில் அனுஷ்கா குறித்து விசாரித்தால், தெலுங்கில் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம். 40 வயதுப் பெண்ணைக் காதலிக்கும் 20 வயது பையன். இதற்குள் நடக்கும் விபரீதங்களைக் களமாகக் கொண்டு படம் உருவாக இருக்காம். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். மீண்டும் அனுஷ்கா திரையில் ஜொலிப்பாரா என்பதைப் பொருத்திருந்துப் பார்க்கலாம்.

Related posts

Leave a Comment