நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது

தனுஷை நடிகராக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவும், கொண்டாடித் தீர்க்கவும் மிக முக்கியக் காரணம் செல்வராகவன். தனுஷ் – செல்வா கூட்டணியில் வெளியான படங்களே அதற்கு உதாரணம். காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாக இருக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வைரலனது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக திரைக்கதை வசனத்தை எழுதிமுடிக்கும் வேலைகளில் இருந்தார் செல்வராகவன். தற்பொழுது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே படத்தை துவங்குகிறார்களாம். ஏனெனில், படத்தின் வேலைகள் வேகவேகமாக நடந்துமுடிகிறதாம். தற்பொழுது, ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் க்ரே மேன் எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தனுஷ் துவங்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘தனுஷ் 43’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பையும் அதே நேரம், செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பையும் துவங்குகிறார்களாம்.
நடிகராக கீர்த்தி சுரேஷூடன் சாணிக்காகிதம் படத்தில் நடித்து வருகிறார் செல்வராகவன். எப்படியும், செல்வராகவனுக்கு நடிகராக இந்தப் படமும், இயக்குநராக ‘நானே வருவேன்’ படமும் இந்த வருடம் வெளியாக இருக்கிறது.

Related posts

Leave a Comment

20 + 13 =