மாரிசெல்வராஜுக்கு ஐ லவ் யு சொன்னதனுஷ் அனுப்பிய கடிதம்

தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார் .
தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்திற்குசந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலைசென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது

உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் இயக்குனர்மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையகளையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் இல்லையே என்ற குறையை மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாரி செல்வராஜை என்னிடம் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான். இந்தப் படத்தின் கதையை ஒரு புத்தகமாகக் கொடுத்துள்ளார் மாரி.அதை என் பூஜை அறையில் வைத்துள்ளேன். இந்தப் படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி .கர்ணன் வருவான், கர்ணன் வெல்வான் வாய்மையே வெல்லும்.இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…..,

கர்ணன் கதையைக் கேட்ட நாள் முதல், திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக எடுக்க விட்டார்கள் பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்துப் பகுதியில் எடுத்ததற்கான காரணம் படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான்.இப்படத்துக்காக நூறு வீடுகள் கொண்ட கிராமத்து செட் அமைக்கப்பட்டது. இப்படி அழகான ஒரு செட் அமைத்துக் கொடுத்த ஆர்ட் டைரக்டருக்கு என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் எனக்கு 12 ஆண்டுகால பழக்கம். மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் எனக்கென்று ஒரு தனிக்கவனம் எடுத்து இசை அமைத்துள்ளார்.இந்தப்படத்தில் என் கிராமத்து மக்கள் நிறையப் பேர் நடித்திருக்கிறார்கள்.அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார்.

அவருடைய உழைப்பு அளப்பரியது. ஆங்கிலப்படத்தில் நடிக்க அமெரிக்கா செல்லுமுன் இருந்த ஒரு நாளில், ஒரு பாடல் பாடினார், படத்தின் டப்பிங்கை முடித்தார்.அதன்பின் புகைப்படப்படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.அப்புறம், இந்தப் படத்தை தனுஷ் சார் பார்த்தபோது பதட்டமாக இருந்தது.படம் முடிந்ததும் நீங்கள் மேலும் பல உயரங்களுக்குப் போவீர்கள் என்றார். படம் பற்றி ஒண்ணும் சொல்லலியே என்றேன். இப்ப சொன்னது போதாதா? படம் சூப்பர், ஐ லவ் யூ என்றார்.

அதன்பின் தாணு சார் படம் பார்த்தபோது மிகவும் பயத்துடன் வெளியில் உட்கார்ந்திருந்தேன்.படம் முடியும் நேரத்தில் சட்டென உள்ளே நுழைந்தேன். தாணு சார் அழுதுகொண்டிருந்தார்.கிட்டே போனதும் என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்துப் பாராட்டினார்.அப்போதுதான் எனக்கு தெம்பு வந்தது.இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவில் இருந்து தனுஷ் எழுதிய கடிதம்
ஆங்கிலப் படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதால் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அவரைத் தவிர்த்து படக்குழுவினர் அனைவரும்கலந்து கொண்டார்கள்.

இதனால் வெளிநாட்டில் இருந்து தனுஷ் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதம் பத்திரிகையாளர் சந்திப்பில் வாசித்துக் காட்டப்பட்டது.

அந்தக் கடிதத்தில் தனுஷ் கூறியிருப்பதாவது…..

சீக்கிரம் வருவேன். ’கர்ணன்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற, கொண்டாடுற நிறையப் பேர் இந்தப் படத்துல இருக்காங்க. இந்தப் படம் எனக்கு ஒரு நடிகனா, மனிதனா நிறைய விசயங்கள் கத்துக் கொடுத்துச்சு. மாரி செல்வராஜோட உறுதியும், அவரோட மனிதத் தன்மையும் தினம் தினம் ஆச்சரியமா இருந்தது. ஒரு நபர், மாரி மாதிரி ஒரு நல்ல மனிதராக இருக்க முடியுமான்னு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைய உங்க கர்ணனா மாத்துனதுக்கும், என் வாழ்க்கைல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்துக்கிட்டு இருக்கு.என்னையும் நான் தேர்ந்தெடுக்கிற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணு சாருக்கு என் நன்றி. அவர் என் மேல வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை, எனக்கு ஒரு நடிகனா இருக்கிற பொறுப்புகளை ஞாபகப்படுத்திடே இருக்கு. இன்னும் அதிகமா உழைக்கணும், அப்படிங்கிற சக்தியைக் கொடுத்துக்கிட்டே இருக்கு.
நம்ம மண்ணோட இசை வழியாகவும், அந்த மண்ணின் கலைஞர்கள் மூலமாகவும் சந்தோஷ், கர்ணனுக்கு யானை பலத்தைச் சேர்த்திருக்கார். அவருக்கு நன்றி. எனக்கு நல விரும்பிகள் கம்மிதான். என்னோட உண்மையான நல விரும்பிகளாக இருந்ததுக்கு ரொம்ப நன்றி சந்தோஷ்.

இந்த இடத்துல நான் மீனா சந்தோஷுக்கும் என் நன்றியைச் சொல்லணும். அவங்கதான் எனக்கு மாரி செல்வராஜை அறிமுகப்படுத்தி வச்சாங்க. நன்றி தேனி ஈஸ்வர் சார். உங்களோட பணியைப் பார்த்த எல்லாரும் அத அவ்ளோ நேசிக்கிறாங்க. வாழ்த்துகள் சார்.
’கர்ணன்’ படக்குழுவினருக்கும், அவங்க அர்ப்பணிப்பு, அன்பு, ஆதரவு எல்லாத்துக்கும் நன்றி. இந்தப் படத்துக்காக உடல்ரீதியா, மனரீதியா, உணர்ச்சிரீதியா என்னை விட அதிகமான உழைப்ப அவங்க எல்லாருமே போட்டிருக்காங்க. ‘கர்ணன்’ இவ்ளோ நம்பகத்தன்மையோட இருக்கு அப்படின்னா அது அவங்க எல்லாரோட கடும் உழைப்பால தான்.

எனக்குத் தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்துவரும் என் இரசிகர்களுக்கு நன்றி. நான் என்னோட சிறந்த நடிப்பைக் கொடுக்க எப்போதுமே முயற்சி பண்றேன். ’கர்ணன்’ உங்க எல்லாரையும் சந்தோசப்படுத்தும்னு நம்புறேன். இங்க வந்ததுக்கு எல்லாருக்கும் மறுபடியும் நன்றி. ’கர்ணன்’ வருவான், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்”.

இவ்வாறு தனுஷ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment