மதுரை மாவட்டத்தில் வாக்குபதிவு குறைய காரணம் என்ன?

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சம் மற்றும் பூத் சிலிப் வழங்கப்படாதது ஆகிய காரணங்களால், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாகத் தகவல் வெளி யாகி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 71.09 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் 70.33 சதவீத வாக்குகளே பதிவாகின.

இந்தத் தேர்தலில் கரோனா அச்சத்தால் பலர் வாக்களிக்க வராத நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் முறையாக பூத் சிலிப் வழங்கப்பாடத்தும் வாக்குப்பதிவு சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கும் பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்களிக்க வேண் டிய இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம்.முன்பு பூத்சிலிப்புகளை அரசியல் கட்சியினரே வழங்கி வந்தனர். அந்த நேரத்தில், வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா நடப்பதாகப் புகார் எழுந்ததால், தற்போது தேர்தல் ஆணையம் சார்பில் பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையம் சார்பில் தேர் தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். இந்த தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு சரியாக பூத் சிலிப் வழங்கப்படவில்லை.

பூத் சிலிப் இல்லாமல் வாக்களிக்க வந்த வாக்காளர்கள், பூத் சிலிப் வாங்கி வருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர். பலர் வாக்குச்சாவடிக்கு முன்பிருந்த கிராம நிர்வாக அலுவலக ஊழியர்களிடம் பூத் சிலிப் வாங்கிச் சென்று வாக்களித்தனர்.

பல இடங்களில் பூத் சிலிப் வாங்குவ தற்காக வாக்காளர்கள் கிராம நிர்வாக அலுவலகங்களுக்குச் சென்றனர். வாக்காளர்களுக்கு கொடுக்கப்படாமல் கிராம நிர்வாக அலுவலகங்களில் வைக்கப் பட்டிருந்த பூத் சிலிப்புகளிலிருந்து தங்கள் சிலிப்களை வாக்காளர்களே தேடி எடுத்து வாக்களிக்கச் சென்றனர். பல மணி நேரம் தேடியும் பூத் சிலிப் கிடைக்காத நிலையில் பொறுமையிழந்த சிலர் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதைக் காணமுடிந்தது.

இதுகுறித்து திருமோகூரைச் சேர்ந்த செந்தில்குமார் கூறியதாவது: பூத் சிலிப்பை வீடுகளுக்கே வந்து ஊழியர்கள் வழங்க வேண்டும். ஆனால், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு, அங்கு வந்து வாங்கிச் செல்லுமாறு கூறுகின்றனர். இந்த தேர்தலில் அதுவும் நடக்கவில்லை. சிலருக்கு மட்டும் ஒப்புக்கு வழங்கி விட்டு பூத் சிலிப்புகளை மொத்தமாக கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வைத்துக் கொண்டனர்.

தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. பூத் சிலிப் இருந்தால் விரைந்து வாக்களிக்க முடியும். பூத் சிலிப் வழங்காமல் நூறு சதவீத வாக்குப் பதிவு சாத்தியமல்ல. பூத் சிலிப் கிடைக்காமல் பலர் வாக்களிக்காமலேயே வீடுகளுக்கு சென்றுவிட்டனர் என்றார்.

இதுபற்றி கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘ 2 நாட்களுக்கு முன்பு தான் பூத் சிலிப்புகள் வந்தன. இதனால் முடிந்தளவு வீடுகளுக்குச் சென்று வழங்கினோம்.’ என்றனர்.

Related posts

Leave a Comment