தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் மொத்தமாக 50 சீட்டுகளுக்குக் குறைவாகவே பெறும் என்று திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சியான தி ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரசாந்த் கிஷோர் தமிழகம், மேற்கு வங்காளம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பாஜக 200 இடங்களைப் பெறும் என்று அமித் ஷா உள்ளிட்டோர் கூறி வருகிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “பாஜகவுக்கு பண பலம் இருக்கிறது, மத்திய அரசு என்ற ஆட்சி பலம் இருக்கிறது. டெல்லி தேர்தலில்கூட அவர்கள் பல்வேறு மாநில முதல்வர்களை பிரச்சாரத்துக்கு இறக்கினார்கள். அதேபோல மேற்கு வங்காளத்திலும் இப்போது பல்வேறு பிரச்சாரர்களை களமிறக்கியுள்ளனர். ஆனால், களம் வேறு மாதிரி இருக்கிறது. மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாக போராடிக் கொண்டுள்ளார். அவர் தீவிரமாக போராடினால் பதற்றம் அடைந்துவிட்டார் என்பீர்கள். அவர் போராடவில்லை என்றால் விட்டுக் கொடுத்துவிட்டார் என்பீர்கள். இந்த விமர்சனங்கள் வழக்கமாக வரக் கூடியதுதான்.
மேற்கு வங்காளக் களத்தைப் பொறுத்தவரை எனது கணிப்பு என்னவெனில் பாஜக அங்கே 100 தொகுதிகளைத் தாண்ட முடியாது. அப்படி நூறு தொகுதிகளைத் தாண்டிவிட்டால் தேர்தல் உத்திவகுப்பாளர் என்ற இந்தத் தொழிலையே நான் விட்டுவிடுகிறேன்” என்று பதிலளித்தார் பிரசாந்த் கிஷோர்.
மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை இப்படி உணர்ச்சிவசப்படுகிறீர்களே… தமிழ்நாடு தேர்தலில் நீங்கள் திமுகவுக்காகப் பணி செய்துள்ளீர்கள். உங்களுக்கு தமிழ்நாடு முக்கியமா, மேற்கு வங்காளம் முக்கியமா? தமிழகத்தில் உங்கள் கணிப்பு என்ன என்ற கோஸ்வாமியின் கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர்,
“ஏனெனில் மேற்குவங்காளத்தில் என்னை மையப்படுத்தி தொடர்ந்து சினமூட்டும், கலகமூட்டும்படி பேசி வருகிறார்கள். அதனால் அப்படி சொல்கிறேன். எனக்கு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் இரு மாநிலங்களுமே முக்கியமானவைதான்.
தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, திமுகவுக்கு எதிரான மொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்து 50 சீட்டுகளைத் தாண்ட முடியாது” என்று கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.