ஓய்வு எடுக்ககொடைக்கானல் சென்றார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று (ஏப்ரல் 16) நான்குநாள் பயணமாக கொடைக்கானல் சென்றனர்.தேர்தல் பணிகளுக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்த ஸ்டாலின், வெளிநாட்டுப் பயண திட்டங்களைத் தவிர்த்து தான் ஏற்கனவே வந்து சென்ற கொடைக்கானலையே மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் பிற்பகல் 12.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு கொடைக்கானல் தாம்ரா ஹோட்டலுக்கு 3.30க்கு சென்று சேர்ந்தனர் ஸ்டாலினும், குடும்பத்தினரும்.கொரோனா பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பயணம் காரணமாக எந்த இடத்திலும் கட்சியினர் வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார் ஸ்டாலின். எனவே வழக்கமான வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.

சென்னையில் ஸ்டாலின் வீட்டில் இருந்து ஒரு ஆண் ஊழியர், ஒரு பெண் ஊழியர் ஆகியோர் தனியாக நேற்றே புறப்பட்டு விட்டனர். 19 ஆம் தேதி வரை பயன்பாட்டுக்குரிய காய்கறி, மளிகைப் பொருட்கள் கூட சென்னையில் இருந்தே ஸ்டாலினுக்காக பிரத்யேகமாகக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. கொரோனா தொற்று குறித்த பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.19 ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்கி ஓய்வெடுப்பதோடு அரசியல் ரீதியான , அடுத்த அரசு ரீதியான முக்கிய ஆலோசனைகளையும் மேற்கொள்கிறார் ஸ்டாலின்.

Related posts

Leave a Comment