மன்மோகன்சிங்குக்கும் கொரானா

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், டெல்லியில் இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நேற்று (ஏப்ரல் 19) அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க, தடுப்பூசி நிறுவனங்களுடன் பேசுதல், உற்பத்தியை அதிகரிக்க போதுமான நிதியுதவியை வழங்குதல், மத்திய அரசு அவசர தேவைக்கான 10 சதவிகிதத் தடுப்பூசியை வைத்துக் கொண்டு மீதி 90 சதவிகிதம் தடுப்பூசிகளை மாநிலங்களே கையாள வேண்டுமென்றும் வற்புறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து நேற்று (ஏப்ரல் 19) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். “இந்தக் கடிதம் உங்களை பூரண உடல்நலத்தோடு சந்திக்கட்டும்” என்றுதான் தொடங்கியிருந்தார் ஹர்ஷவர்தன்.

அந்தக் கடிதத்தில், “நாட்டின் மீதான உங்கள் பற்றுக்கும் கவலைக்கும் நன்றி. ஆனால் தடுப்பூசிகள் பற்றி அரசுக்குச் செய்யும் அறிவுரையை முதலில் உங்கள் காங்கிரஸ்காரர்களுக்குச் சொல்லுங்கள். அவர்கள்தான் தடுப்பூசி பற்றி அவநம்பிக்கையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்” என்று முன்னாள் பிரதமரின் அறிவுரை, ஆலோசனைகளுக்கு முற்றிலும் அரசியல் ரீதியாகப் பதிலளித்திருந்தார்.
இதற்கிடையில் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல், லேசான நெஞ்சுவலி ஏற்பட அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
88 வயதான மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். சர்க்கரை நோயும் அவருக்கு உள்ளது. கொரோனா தடுப்பூசி இரு டோஸும் செலுத்திக்கொண்ட மன்மோகன் சிங்குக்கு நேற்று கொரோனா பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. அவரது உடல்நலம் சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

Leave a Comment