தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 19) குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ஏற்கனவே மருத்துவர்களின் ஆலோசனையோடு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள் முதல்வர் வட்டாரங்களில்.
இதற்கிடையே தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தரப்பினரிடமும் பேசி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தரவுகளையும் கள அனுபவம் மூலம் கிடைக்கும் தகவல்களையும் பெற்று வந்தார்.
முதல்வரின் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டுவரும் சுனில், “அதிமுக கூட்டணி 85-90 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. மேலும் ஒரு 27 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவுகிறது. அதிலும் அதிமுகவுக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும்” என்று முதல்வரிடம் ஒரு ரிப்போர்ட் அளித்திருந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
இதற்கிடையே முன்னாள் உளவுத்துறை ஐஜியும், முதல்வருக்கு நெருக்கமானவருமான சத்தியமூர்த்தி தனி டீம்வைத்து ஆய்வு செய்திருக்கிறார். தேர்தலுக்குப் பிறகான கள நிலவரத்தை ஆய்ந்து அவர் முதல்வருக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், 130 சீட்டுகள் அதிமுகவே வருமென்று சொல்லியிருக்கிறார்.
இத்தகைய ஏஜென்சி தகவல்களுக்கு இடையேதான் சற்று காத்திருந்து மாநில அரசின் உளவுத்துறை ரிப்போர்ட்டையும் பெற்றுள்ளார் முதல்வர். தமிழக உளவுத்துறையினர் தேர்தல் முடிந்த உடனே அறிக்கை ஏதும் அனுப்பவில்லை, சற்று ஆராய்ந்த பிறகு அறிக்கை தருவதாக முதல்வரிடம் சொல்லியிருந்தனர். அந்த வகையில் தமிழக உளவுத்துறை முதல்வருக்குக் கொடுத்த டேட்டாவில், “85 சீட்டுகள் அதிமுகவுக்கு உறுதியாக கிடைக்கும். 40 தொகுதிகள் கடுமையான இழுபறியாக இருக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர்களில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடமும் இந்த ரிப்போர்ட் பற்றி விவாதித்துள்ளார். அந்த 40 தொகுதிகள் பட்டியலை பெற்ற வேலுமணி தனது ஏஜென்சி மூலம் அந்த 40 தொகுதிகளிலும் ஒரு பிரத்யேக ஆய்வினை நடத்தியுள்ளார். அதன்பின் முதல்வரிடம் பேசிய வேலுமணி, “அந்த 40 சீட்டுல 20 சீட்டுக்கு மேல நாம்தான் ஜெயிப்போம். நாமதான் ஆட்சி அமைப்போம். இதுல எந்த சந்தேகமும் இல்லை” என்று முதல்வரின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் தனக்கு நெருக்கமான இன்னொரு அமைச்சரான தங்கமணியிடமும் தொலைபேசியில் பேசியிருக்கிறார் முதல்வர். “எனக்கு வர்ற ரிப்போர்ட்ஸ் எல்லாம் தேவையான அளவு நம்பர்களோட நாமே மறுபடியும் ஆட்சி அமைச்சிடுவோம்னுதான் சொல்லுது” என்று கூறியிருக்கிறார்.முதல்வரின் கருத்து குறித்து தங்கமணி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், “சிஎம் ரொம்ப நம்பிக்கையா இருக்காரு. ஆனால், எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கையில்ல” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.